தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் கடைகளில் திருட்டு 25% அதிகரிப்பு

2 mins read
a950fe52-6c26-4840-bb55-6a7f85ded27c
கடைகளில் நடந்த திருட்டுச் சம்பவங்கள், குற்றவாளிகள் நேரடியாகக் களம் இறங்கி அரங்கேற்றிய மொத்த குற்றச்செயல்களில் 18.1 விழுக்காடாக இருந்தன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் இவ்வாண்டின் முதல் பாதியில் குற்றவாளிகள் நேரடியாகக் களம் இறங்கி அரங்கேற்றிய குற்றச்செயல்கள் கூடின.

கடைகளில் இடம்பெற்ற திருட்டுகள் 25.3 விழுக்காடு அதிகரித்தன. இவற்றின் எண்ணிக்கை 1,820ஆக இருந்தது.

கடைகளில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள், குற்றவாளிகள் நேரடியாகக் களம் இறங்கி அரங்கேற்றிய மொத்த குற்றச்செயல்களில் 18.1 விழுக்காடாக இருந்தன.

கடைகளில் பொருள்கள் வாங்கச் செல்வோர் அவர்களாகவே தொகையைச் செலுத்திவிட்டுச் செல்லும் தானியங்கி முகப்புகளே இந்த வகைத் திருட்டு அதிகரித்து இருப்பதற்குக் காரணமாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

காவல்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட இடையாண்டு குற்றச்செயல் புள்ளிவிவரங்கள் மூலம் இந்த நிலவரங்கள் தெரியவருகின்றன.

குற்றவாளிகள் நேரடியாகக் களம் இறங்கி அரங்கேற்றிய குற்றச்செயல்களின் மொத்த எண்ணிக்கை இந்த ஆண்டு முதல் பாதியில் 5.4 விழுக்காடு அதிகமாகி 10,080 ஆயின. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் 9,568ஆக இருந்தது.

மானபங்கம், கடைகளில் திருட்டு, பாலியல் மோகம், குடியிருப்பு, வர்த்தக இடங்களில் திருட்டு ஆகியவை கவலை தருபவையாக உள்ளன என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

கடைகளில் நடந்த திருட்டுகளைப் பார்க்கையில், உணவுப் பொருள்கள், மதுபானம், பராமரிப்புப் பொருள்கள், உடைகள், ஒப்பனைப் பொருள்கன் போன்றவை அதிகம் திருடப்பட்டன.

கடைகளில் நடக்கும் திருட்டுகளைத் தவிர்த்துக்கொள்வதில் சில்லறை விற்பனை நிறுவனங்களுக்கு மிக முக்கியப் பங்கு இருப்பதாக காவல்துறை தெரிவித்தது.

குடியிருப்பு, வர்த்தக இடங்களில் அரங்கேற்றப்பட்ட திருட்டுச் சம்பவங்கள் இந்த ஆண்டின் முதல் பாதியில் 1,010ஆகக் கூடின. இவை மொத்த நேரடி குற்றச்செயல்களில் 10 விழுக்காடாக இருந்தன.

இத்தகைய திருட்டுகளில் பெரும்பாலானவை தெரிந்தவர்களே காட்டிய கைவரிசையாக இருந்தன.

வீடுகளில் இடம்பெற்ற திருட்டுகளின் எண்ணிக்கை இவ்வாண்டு முதல் பாதியில் 497 ஆக இருந்தது. சென்ற ஆண்டில் இந்த எண்ணிக்கை 417ஆக இருந்தது. பணம், நகை, கைப்பேசிகள், ஆடம்பர கைப்பைகள், கைக்கடிகாரங்கள் ஆகியவை அதிகம் திருடப்பட்டன.

வர்த்தகக் கட்டடங்களில் 2023 முதல் ஆறு மாத காலத்தில் 306 திருட்டுகள் நடந்தன. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டு இதே காலத்தில் 208ஆக இருந்தது.

குறிப்புச் சொற்கள்