சிங்கப்பூரில் செயல்படும் வண்ணச்சாய விற்பனை நிறுவனங்கள் பள்ளிக்கூட ஊழியர்கள் போன்று ஆள்மாறாட்டம் செய்து நடிக்கும் மோசடிக்காரர்கள் வலைக்குள் சிக்குகின்றன.
அந்த மோசடிக்காரர்கள் வண்ணங்களை விநியோகிக்கும் போலியான நபர்களுக்கு முன்பணம் போய் சேரும்படி நிறுவனங்களை ஏமாற்றிவிடுகிறார்கள்.
காவல்துறை இதன் தொடர்பில் வெள்ளிக்கிழமை எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்தப் புதிய வகை மோசடிப்பேர்வழிகள் வண்ணச்சாய விற்பனை நிறுவனங்களுடன் தொடர்புகொள்ளும்போது தங்களை பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த ஊழியர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள்.
கூடியவிரைவில் குறிப்பிட்ட வகை வண்ணச்சாயம் தங்களுக்கு வேண்டுமென்று அவர்கள் கேட்கிறார்கள்.
அவர்கள் கேட்கும் குறிப்பிட்ட வண்ணச்சாயம் கடைகளில் இல்லை என்றால் அந்த மோசடிப்பேர்வழிகளே போலியான நிறுவனங்களின் முகவரிகளைக் கொடுத்து அவற்றுடன் தொடர்புகொண்டு குறிப்பிட்ட வண்ணச்சாயத்தை வாங்கி தரும்படி யோசனை கூறுகிறார்கள்.
அந்த யோசனையை ஏற்று செயல்படும் கடைக்காரர்கள் அத்தகைய போலி நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு தங்களுக்குக் குறிப்பிட்ட வண்ணம், குறிப்பிட்ட அளவுக்கு வண்ணம் வேண்டுமென்று கேட்டு அதற்கான முழுத்தொகையையும் வங்கிக் கணக்கு வழியாக அல்லது பேநவ் செயலி மூலம் செலுத்திவிடுகிறார்கள்.
பள்ளிக்கூடங்களுக்கு வண்ணச்சாயம் போய்ச் சேராதபோதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டு இருப்பதை கடைக்காரர்கள் தெரிந்துகொள்கிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
அங் மோ கியோவில் செயல்படும் ஒரு கடையின் உரிமையாளர் ஆகஸ்ட் மாதம் இத்தகைய மோசடிக்கு ஆளாகி $27,000 தொகையை இழந்துவிட்டார். ஆசிரியர் போன்று நடித்த ஒருவர் அவரை ஏமாற்றிவிட்டார்.
முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொண்டு மோசடிப்பேர்வழிகளிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும்படி நிறுவனங்களின் உரிமையாளர்களை காவல்துறை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டு இருக்கிறது.