சிங்கப்பூரில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதற்கொண்டு வேலை தொடர்பான இணைய மோசடிகளுக்கு ஆளாகி குறைந்தபட்சம் 6,600 பேர் மொத்தம் $96.8 மில்லியன் பணத்தை இழந்துவிட்டதாக காவல்துறை சனிக்கிழமை தெரிவித்தது.
இந்த வகை இணைய மோசடிகள் எப்படி அரங்கேற்றப்படுகின்றன என்பதை காவல்துறை விளக்கியது.
மோசடிக்காரர்கள் முதலில் வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் செய்திகளை அப்பாவிகளுக்கு அனுப்புவார்கள். ஆய்வு நடத்துவதாகக் கூறி அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்குப் பதில் தெரிவிக்கும்படி அவர்கள் கேட்பார்கள்.
இன்ஸ்டகிராம் பதிவுகளைப் பயன்படுத்தும்படியும் அவர்கள் சொல்வார்கள். அதைச் செய்து முடித்ததும் மோசடிக்காரர்கள் ஒரு சிறிய தொகையை அப்பாவிகளுக்கு தள்ளுபடித் தொகையாகக் கொடுப்பார்கள்.
அந்தப் பணம் அப்பாவிகளுக்குச் சென்று சேர்ந்ததற்கான அறிகுறிகளை அனுப்பி வேறொரு வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் குழுவில் சேர்ந்து மேலும் பல வெகுமதிகளைப் பெறும்படி அப்பாவிகளை மோசடிக்காரர்கள் கேட்டுக்கொள்வார்கள்.
அவற்றைச் செய்து முடிக்கும் அப்பாவிகள் மோசடித்தனமான வலைத்தளங்களில் கணக்குகளை உருவாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
மோசடிக்காரர்கள் தெரிவிக்கக்கூடிய வங்கிக் கணக்குகளில் பணத்தை அனுப்ப வேண்டி இருக்கும். சில நேரங்களில் பல்வேறு காரணங்களுக்கான பெரும் தொகையை அனுப்பிவைக்கும்படியும் அப்பாவிகளிடம் மோசடிக்காரர்கள் சொல்வார்கள்.
தங்களுக்குக் கிடைத்த தள்ளுபடித் தொகையை எடுத்துக்கொள்ள முடியாமல் போகும்போதுதான் அல்லது மோசடிப்பேர்வழிகளைத் தொடர்புகொள்ள முடியாமல் போகும்போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பது அப்பாவிகளுக்குத் தெரியவரும் என்று காவல்துறை விளக்கி இருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
ஸ்கேம்ஷீல்டு செயலியைப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு பாதுகாப்பாகச் செயல்பட்டு மோசடிகளைத் தவிர்த்துக்கொள்ளும்படி மக்களுக்கு காவல்துறை ஆலோசனை கூறி உள்ளது.
யாராவது உங்களுக்கு அதிக பலன் தரக்கூடிய வேலை வாய்ப்புகள் எளிதாக கிடைக்கும் என்று சொல்வார்களேயானால் அதை நம்பிவிடாதீர்கள் என்றும் காவல்துறை வலியுறுத்தி உள்ளது.
மோசடிக்கு ஆளானவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 20 முதல் 39 வரை வயதுள்ளவர்கள். இத்தகைய அப்பாவிகள் பெரும்பாலும் வேலை தொடர்பான மோசடிக்கார்களுக்கே இரையாகிறார்கள் என்பது காவல்துறை புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது.
சிங்கப்பூரில் மோசடிச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.