தென் சிங்கப்பூரில் உள்ள 13 பூங்காக்களையும் இணைக்கும் வழித்தட திட்டம்

தென் சிங்கப்பூரில் உள்ள 13 பூங்காக்களையும் இணைக்கும் வழித்தட திட்டம்

2 mins read
89ba5f9b-6c7f-43df-bc15-2a9e1f6bca88
தென் சிங்கப்பூரில் உள்ள மூன்று பூங்காக்களில் ஒன்றான லாப்ரடார் வனப்பூங்கா கருப்பொருள் அடையாளங்களுடன் தனக்கே உரிய தன்மைகளுடன் வட்டாரப் பூங்காவாக உருவாக்கப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

பெரிய தென் நீர்முகப்பு, தென் முகட்டுப் பகுதிக்குப் புதுப்பொலிவு வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக சிங்கப்பூரின் தென் பகுதியில் உள்ள 13 பூங்காக்கள் புதுப்பொலிவு பெறும். அவை வழித்தடம் மூலம் இணைக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

இவற்றுக்கான திட்டங்கள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன. அவை அங்கீகரிக்கப்பட்டால் அந்தப் புதிய வசதிகள் இடம்பெறும்.

ஹார்ட்பார்க், லாப்ரடார் வனப்பூங்கா, வெஸ்ட் கோஸ்ட் பூங்கா ஆகிய மூன்று பூங்காக்களும் மறுஉருவாக்கம் பெற்று வட்டாரப் பூங்காக்களாக உருப்பெறும்.

தனக்கே உரிய அம்சங்களுடன் கருப்பொருள் அடையாளங்களுடன் அவை திகழும்.

தேசிய பூங்காக் கழகம் பாசிர் பாஞ்சாங் பூங்காவின் ஒரு புதிய பகுதியை சனிக்கிழமை திறந்தது. அதையொட்டி இந்தத் திட்டங்களைக் கழகம் அறிவித்து உள்ளது.

கழகம் 13 பூங்காக்களுக்கும் திட்டங்களைத் தீட்டி இருக்கிறது. அதன்படி அவற்றை இணைக்கும் கருப்பொருள் வழித்தடம் உருவாக்கப்படும்.

அந்தத் தடம் இயற்கை அடிப்படையிலான பொழுதுபோக்கு அம்சங்களையும் விளையாட்டு அனுபவத்தையும் பொது மக்களுக்கு ஏற்படுத்தித் தரும்.

தென் முகட்டுப் பகுதிகளுக்கும் மேற்கு கடற்கரைக்கும் செல்லும் எல்லா மக்களுக்கும் பலதரப்பட்ட பரந்த அனுபவங்களை அது ஏற்படுத்தித் தரும் என்று கழகம் தெரிவித்தது.

வட்டாரப் பூங்காக்களாக மேம்படுத்தப்படும் மூன்று பூங்காக்களும் நீர்முகப்பு பகுதியைச் சிங்கப்பூரின் தெற்குக் கடலோர நகர்ப் பகுதிகளுக்கான புதிய முக்கிய வாயிலாக உருவாக்கும் என்று கழகம் தெரிவித்து இருக்கிறது.

மூன்று கருப்பொருள் பூங்காக்களின் வடிவமைப்பு தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து கருத்துகளைத் திரட்டுவதற்காக அவர்களை ஈடுபடுத்தும் கலந்துரையாடல் கூட்டங்களை கழகம் நடத்தும்.

அந்தக் கலந்துரையாடல் கூட்டம், செப்டம்பர் 23, 24ஆம் தேதிகளில் வெஸ்ட் கோஸ்ட் பூங்காவில் நடக்கவிருக்கின்ற பூங்கா விழாவில் தொடங்கும்.

அவற்றில் கலந்துகொள்ள பொதுமக்கள் www.go.gov.sg/fotpengagement என்ற முகவரியைப் பயன்படுத்தலாம்.

அந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துகள், யோசனைகளைத் தெரிவிக்கும்படி தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ சனிக்கிழமை சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டார்.

சிங்கப்பூரின் வட்டாரப் பூங்காக்கள் மக்களிடம் மிகவும் பிரபலமாகி இருப்பதாகவும் அவர் கூறினார்.

பொதுப் பூங்காக்களில் பொதுவாகக் காணப்படாத கருப்பொருள், பொழுதுபோக்கு அம்சங்கள் வட்டாரப் பூங்காக்களில் இருப்பதை அவர் சுட்டினார்.

இதனிடையே, சனிக்கிழமை பாசிர் பாஞ்சாங் பூங்காவின் புதிய 2.2 கி.மீ. நீளமுள்ள ஒரு பகுதியை தேசிய பூங்காக் கழகம் திறந்தது.

அந்தப் பகுதி, பாசிர் பாஞ்சாங் உணவு நிலையத்தையும் வெஸ்ட் கோஸ்ட் பூங்காவையும் இணைக்கிறது.

அது, லாப்ரடார் வனப்பூங்காவையும் ஜூரோங் மத்திய பூங்காவையும் இணைக்கும் 17 கி.மீ. பாதையின் ஓர் அங்கமாகும்.

சிங்கப்பூரின் முக்கியமான துறைமுக முனையங்களில் ஒன்றாக பாசிர் பாஞ்சாங் திகழ்கிறது. அந்தத் துறைமுகத்தின் பாரம்பரியம், கடல்துறை தொடர்பான கருப்பொருள்களுடன் பாசிர் பாஞ்சாங்கின் வரலாற்றைக் காட்டுவதாகவும் அந்தப் புதிய பாதை இருக்கிறது. அதில் 6 மீ. உயரம் உள்ள கப்பல் கொள்கலன்கள் உறைவிடங்களாக மாற்றப்பட்டு இருக்கின்றன.

அந்தக் கொள்கலன்களை சிங்கப்பூர் துறைமுக ஆணையம் நன்கொடையாக வழங்கி இருந்தது.

குறிப்புச் சொற்கள்