திரு லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளில் சிங்கப்பூர் அரசியல் தலைவர்கள் புகழாரம்

இன்று, செப்டம்பர் 16ஆம் தேதி, சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாள்.

அதை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் சிலர் சமூக ஊடகப் பதிவுகளில் அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளனர்.

அமரர் லீயின் மூத்த புதல்வரான பிரதமர் லீ சியன் லூங், திரு லீ குவான் இயூ உள்ளிட்ட மூத்த தலைவர்கள் புதிய, சுதந்திர சிங்கப்பூருக்கான பண்புநலன்களையும் கொள்கைகளையும் எவ்வாறு வகுத்தனர் என்பதைப் பகிர்ந்துகொண்டார்.

திறமைக்கு முன்னுரிமை, சமயச் சுதந்திரம், இன நல்லிணக்கம், நீதி, சமத்துவம், தற்சார்பு, நேர்மை, ஊழலுக்கு இடங்கொடாமை ஆகியவற்றை அவர் சுட்டினார்.

படம்: திரு லீ சியன் லூங்/ஃபேஸ்புக்

சிங்கப்பூரர்கள், குறிப்பாக நவீன, வளப்பமான சிங்கப்பூரில் வளர்ந்த இளம் சிங்கப்பூரர்கள், நாட்டின் ஆரம்பகால நிலைமையையும் உறுதியுடனும் வைராக்கியத்துடனும் நம் முன்னோர்கள் சவால்களைச் சமாளித்த விதத்தையும் புரிந்துகொள்வர் என்று தாம் நம்புவதாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

“சிங்கப்பூரின் கதை இத்துடன் முடிவடையவில்லை. சவால்களைச் சமாளிக்கும் ஆற்றல், துணிச்சல், சிங்கப்பூரை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற உந்துதல் ஆகியவை நம்மிடம் எப்போதும் இருக்கட்டும். மாஜுலா சிங்கப்பூரா” என்று பிரதமர் கூறியுள்ளார்.

துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், மக்களில் முதலீடு செய்யும் நடைமுறைக்கு திரு லீ குவான் இயூ எப்போதும் முன்னுரிமை அளித்ததாகத் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

திரு லீ குவான் இயூ நூற்றாண்டு அறநிதிக்குத் திரட்டப்பட்ட தொகை மாணவர்களின் கல்வி, மேம்பாட்டுக்கு உதவும் என்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார். இதன் தொடர்பில் கூட்டு முயற்சி மேற்கொண்ட சீன, மலாய், இந்திய, யுரேஷிய வர்த்தக சபைகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

அறநிதித் திரட்டுக்கு உதவிய சீன, மலாய், இந்திய, யுரேஷிய வர்த்தக சபைகளுக்கு துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நன்றி கூறினார். படம்: திரு லாரன்ஸ் வோங்/ஃபேஸ்புக்

துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், தாம் திரு லீ குவான் இயூவின் முதன்மைத் தனிச் செயலாளராகப் பணிபுரிந்த நாள்களை நினைவுகூர்ந்தார்.

தமது பண்புகளையும் கண்ணோட்டத்தையும் வரையறுக்க தருணங்கள் அவை என்றார் திரு ஹெங்.

அமரர் லீயிடமிருந்து தாம் கற்றுக்கொண்ட மூன்று முக்கிய அம்சங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.

முதலாவது ஒருவரின் குறிக்கோளை அடையாளம் கண்டு அதை அடைவதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவது. இரண்டாவது, உத்திபூர்வமான, நீண்டகாலக் கண்ணோட்டம். மூன்றாவது புத்தாக்கத்தைக் கண்டு அஞ்சாமல் காலத்துக்குப் பொருந்தும் வகையில் வாழ்வது.

இருமொழிக் கொள்கை குறித்த அமரர் லீயின் நிலைப்பாட்டையும் திரு ஹெங் நினைவுகூர்ந்தார்.

கல்வி அமைச்சரும் பொதுச் சேவைத் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான சான் சுன் சிங், 12 ஆண்டுகளுக்குமுன் தாம் திரு லீ குவான் இயூவுடன் கலந்துகொண்ட முதல் மரம்நடு விழாவின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அமரர் லீயின் 100வது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், மரம்நடும் பாரம்பரியத்தைத் தொடரும் நிகழ்ச்சியில் தஞ்சோங் பகார் மற்றும் ராடின் மாஸ் குடியிருப்பாளர்களுடன் இணைந்துகொண்டதாக அவர் கூறினார். வருங்காலத் தலைமுறையினரின் வெற்றிக்கு வித்திடும் கடப்பாட்டை அது உணர்த்துவதாக அவர் குறிப்பிட்டார்.

“சிங்கப்பூரை, தொடர்ந்து வளரும், ஒளிரும் நாடாக வைத்திருப்பதே அவருக்கு நாம் செலுத்தும் ஆகச் சிறந்த அஞ்சலி,” என்று அமைச்சர் சான் கூறினார்.

அமரர் லீயும் மூத்த தலைவர்களும் 1954ஆம் ஆண்டு தோற்றுவித்த மக்கள் செயல் கட்சி, திரு லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக சிங்கப்பூர் முழுவதும் 10,000 மரக்கன்றுகளை நடும் இயக்கத்தில் பங்களிக்கும்படி சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!