லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம்; சிங்கப்பூர் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள்

2 mins read
04d5344e-ac04-42ef-8529-a671e316dab6
நவீன சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படும் திரு லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் பாசிர் ரிஸ் பூங்காவில் 45க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மொத்தம் 50 மரக்கன்றுகளை நட்டனர். - படம்: சாவ் பாவ் 

சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி சிங்கப்பூர் முழுவதும் சனிக்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

மரம் நடும் நிகழ்ச்சி முதல் காணொளிக் காட்சி வரை பலவும் உள்ளடங்கிய அந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான மக்கள் மிகவும் நாட்டத்துடன் கலந்துகொண்டனர்.

நவீன சிங்கப்பூரின் தந்தை என்று அழைக்கப்படும் திரு லீ குவான் இயூ 2015ஆம் தேதி தமது 91வது வயதில் காலமானார்.

சிங்கப்பூரை பசுமை சூழ்ந்த நகராக உருமாற்ற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து திரு லீ அதற்காக அரும்பாடுபட்டார்.

திரு லீ, 1963ல் நாடளாவிய முதலாவது மரம் நடும் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். அந்த இயக்கத்தின் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையிலும் சனிக்கிழமை 45க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மொத்தம் 50 மரக்கன்றுகளை பாசிர் ரிஸ் பூங்காவில் நட்டனர்.

என்டியுசியின் துணை தலைமைச் செயலாளரும் தற்காப்பு மூத்த துணை அமைச்சருமான ஹெங் சீ ஹாவ், அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

திரு லீயும் இதர முன்னோடித் தலைமுறைத் தலைவர்களும் அமைத்த அடிப்படையையும் நன்னெறிகளையும் நினைவில் கொண்டு அவற்றைப் பலப்படுத்த வேண்டியது முக்கியமானது என்று திரு ஹெங் ஊடகத்திடம் தெரிவித்தார்.

அல்ஜுனிட் குழுத்தொகுதி, ஹவ்காங் தனித்தொகுதி அடித்தள அமைப்புகள் சிங்கப்பூருக்குத் திரு லீ ஆற்றிய தொண்டுகளை நினைவுகூறும் வகையில் காணொளி ஒன்றை வெளியிட்டன.

சிராங்கூன் சமூக மன்றத்தில் நடந்த அந்த நிகழ்ச்சியில் சுமார் 250 பேர் அந்த 40 நிமிடக் காணொளியைக் கண்டனர். அந்தக் காணொளி அல்ஜுனிட் குழுத்தொகுதி, ஹவ்காங் தனித்தொகுதி ஆகியவற்றின் சமூக ஊடகத் தளங்களிலும் பதிவேற்றப்பட்டு இருக்கிறது.

தஞ்சோங் பகார் எம்ஆர்டி நிலையத்தில் ‘சித்திரத்தில் சிங்கப்பூர்’ என்ற தலைப்பிலான 67 மீட்டர் நீள 1.7 மீட்டர் உயர சுவரோவியம் திறக்கப்பட்டது. இதை இங் பெங் சிங், 69, என்ற ஓவியர் கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் பாடுபட்டு தீட்டி இருக்கிறார்.

அந்த ஓவியம் சிங்கப்பூரின் வரலாற்றின் முக்கியமான நிகழ்ச்சிகளையும் பிரபலங்களையும் சித்திரிக்கிறது.

அது குறைந்தபட்சம் ஓராண்டு காலத்திற்கு அந்த நிலையத்தில் காட்சிக்கு இருக்கும்.

குறிப்புச் சொற்கள்