வடமேற்கு மாவட்ட குடியிருப்பாளர்களுக்கு புதிய $9.5 மி. வாழ்க்கைச் செலவு மானியம்

வடமேற்கு மாவட்ட குடியிருப்பாளர்களுக்கு புதிய $9.5 மி. வாழ்க்கைச் செலவு மானியம்

2 mins read
1bb1a994-1c84-4029-8af8-a47e74bd6bc8
வடமேற்கு சமூக மன்றத்தின் புதிய மாவட்ட உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருக்கும் திருவாட்டி சாந்தா ராமன். இவர் சிறப்பு உதவிகள் தேவைப்படும் சிறாரை மேலும் அதிகமாக உள்ளடக்கும் வகையில் விளையாட்டு இடங்கள் வேண்டுமென்று குரல்கொடுப்பார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்  

வடமேற்கு மாவட்டத்தின் 19 வட்டாரங்களில் வசிக்கும் மக்களுக்குப் புதிய வாழ்க்கைச் செலவு மானியம் விநியோகிக்கப்படும். அவர்கள் $9.5 மில்லியன் தொகையை மானியமாகப் பெறுவார்கள். இது வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை ஈடுசெய்ய உதவும்.

வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் அந்த மானியத்தை வழங்கும். இது பற்றி துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் சனிக்கிழமை அறிவித்தார்.

நாடாளுமன்ற இல்லத்தில் நடந்த வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்ற உறுப்பினர்கள் நியமன, பாராட்டு விருந்து நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.

புதிதாக விநியோகிக்கப்படவுள்ள அந்த மானியத்திற்கு வடமேற்கு ஆதரவு மானியம் என்று பெயர். அது 2024 முதல் காலாண்டில் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் அடுத்த மூன்றாண்டுகளில் தொண்டூழியர்களுடன் சேர்ந்து செயல்பட்டு குடியிருப்பாளர்களுக்குப் பல்வேறு செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தும்.

வசதி குறைந்தவர்களைக் கைதூக்கிவிடுவது அவற்றின் நோக்கம்.

தேர்ச்சிகளை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்புகளையும் அவை வழங்கும். சமூகத்தில் உதவி தேவைப்படுவோருக்கு உதவி கிடைக்கக்கூடிய வழிகளையும் அந்தச் செயல்திட்டங்கள் ஏற்படுத்தித் தரும்.

வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றத்திற்கான 24 புதிய மாவட்ட உறுப்பினர்கள் சனிக்கிழமை நடந்த அந்த விருந்தில் நியமனம் பெற்றனர். இதர 39 பேர் மறுநியமனம் பெற்றனர்.

வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் 250க்கும் மேற்பட்ட செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது என்றும் கடந்த மூன்றாண்டுகளில் அந்தச் செயல்திட்டங்கள் மூலம் 600,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் நன்மையடைந்து இருப்பதாகவும் திரு வோங் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் நீடித்து, செழித்து, நிலைத்து இருப்பது என்பது ஒட்டுமொத்தமான முயற்சி என்று கூறிய துணைப் பிரதமர், அரசாங்கத்தின் கொள்கைகள் முக்கியம் என்றும் அதேவேளையில், வலுவான சமூகச் செயல்பாடும் தேவை என்றும் கூறினார்.

இத்தகைய செயல்பாட்டைப் பலப்படுத்த சமூக மேம்பாட்டு மன்றங்களால் முடியும் என்றாரவர்.

நியமனம் பெற்ற சமூக மன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 27ஆம் தேதி தொடங்கியது. அவர்கள் மூன்றாண்டுக் காலம் பதவி வகிப்பார்கள்.

வடமேற்கு சமூக மன்றத்தின் புதிய மாவட்ட உறுப்பினராக நியமனம் பெற்றவர்களில் திருவாட்டி சாந்தா ராமன், 53, என்பவரும் ஒருவர். இவர் மைண்ட்ஸ் உட்லண்ட்ஸ் கார்டன் பள்ளியில் சிறப்பு உதவித் தேவைப்படும் மாணவர்களுக்கு 30 ஆண்டுகளாகப் போதித்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்