மோட்டார்சைக்கிள் திருட்டு சம்பவத்தில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படுவதையொட்டி 17 வயதுள்ள மூன்று இளைஞர்களை காவல்துறை கைது செய்து இருக்கிறது.
மோட்டார் வாகனம் ஒன்றைத் திருடியதாக திங்கட்கிழமை பதின்ம வயதினர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்படும்.
குற்றவாளி என்று தீர்ப்பானால் ஏழாண்டு வரை சிறையும் அபராதமும் விதிக்கச் சட்டத்தில் இடம் இருக்கிறது. கைது செய்யப்பட்டு இருக்கும் இதர இருவரும் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
திருடப்பட்ட மோட்டார்சைக்கிளும் தலைக்கவசமும் மீட்கப்பட்டு இருக்கின்றன.
பாசிர் ரிஸ் ஸ்திரீட் 12ல் உள்ள ஒரு கார்ப் பேட்டையில் இருந்து ஒரு மோட்டார்சைக்கிள் திருடுபோய்விட்டதாக வெள்ளிக்கிழமை தங்களுக்கு தகவல் கிடைத்தது என்று காவல்துறை ஞாயிற்றுக்கிழமை அறிக்கையில் தெரிவித்தது.
புகார் பற்றி முழுமையாக அதிகாரிகள் புலன்விசாரணை நடத்தினார்கள். காவல்துறைப் படச்சாதனங்களையும் பிரத்தியேக தொலைக்காட்சியையும் கொண்டு பிடோக் காவல்துறை பிரிவு அதிகாரிகள் மூன்று சந்தேகப்பேர்வழிகளை அடையாளம் கண்டு, அதே நாளன்று அவர்களைக் கைது செய்தார்கள்.
மோட்டார்சைக்கிள் உரிமையாளர்கள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று காவல்துறை ஆலோசனை கூறி இருக்கிறது.

