சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையில் ஆகஸ்ட் மாதம் 510,000 பேருக்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர்.
கொவிட்-19 தொற்றுக்குப் பிறகு இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மாதாந்திர பயணிகளின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதம்தான் 500,000த்தைத் தாண்டியது.
சாங்கி விமான நிலையத்தை நிர்வகித்து நடத்தும் சாங்கி விமான நிலையக் குழுமம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் இவை தெரியவருகின்றன.
சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் ஆகஸ்ட்டில் பயணம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை, கொவிட்-19க்கு முந்திய அளவில் 72% ஆக இருந்தது.
2019 ஆகஸ்ட்டில் இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில் 713,000 பயணிகள் பயணம் மேற்கொண்டனர்.
சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையில் ஜனவரி மாதம் 69,000 பேர்தான் பயணம் செய்தனர். இதனுடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாத அளவு ஏழு மடங்கிற்கும் அதிகமாகும்.
இந்த இரு நாடுகளுக்கும் இடையில் ஆகஸ்ட் மாதம் காலநேர அட்டவணைப்படி சுமார் 2,600 பயணிகள் விமானச்சேவைகள் இடம்பெற்றன.
இது கொவிட்-19க்கு முந்திய அளவில் 76 விழுக்காட்டுக்குச் சமம்.
தொடர்புடைய செய்திகள்
சீனா தன்னுடைய எல்லைகளைத் திறந்துவிட்டதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்து அதிகரித்து இருக்கிறது.
சிங்கப்பூரைப் பொறுத்தவரை இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இந்தோனீசியா, மலேசியா, சீனா ஆகிய நாடுகளில் இருந்துதான் ஆக அதிக எண்ணிக்கையில் பயணிகள் வந்து சென்றனர்.
சாங்கி விமான நிலையத்தின் மொத்த பயணிகள் போக்குவரத்தில் சுமார் 10 விழுக்காட்டிற்குச் சீனா பொறுப்பு வகித்தது. ஆகஸ்ட் மாத நிலவரப்படி, சாங்கி விமான நிலையத்திற்கும் சீனாவின் 25 நகர்களுக்கும் இடையில் விமானச் சேவைகள் இடம்பெற்றன. அந்த நகர்களின் எண்ணிக்கை கொவிட்-19 பரவலுக்கு முன்னர் 2020 ஜனவரியில் 37ஆக இருந்தது.

