சிங்கப்பூரின் பாதுகாப்புக்கு மிரட்டல் விடக்கூடிய சங்கங்களைக் கண்டறிவதற்காகப் புதிதாக அமைக்கப்படும் சங்கங்களுக்கான தானியக்கப் பதிவுச் செயல்முறை மேலும் கடுமையாக்கப்படலாம்.
தற்போதுள்ள சட்டங்களின்படி புது சங்கங்களுக்கான அனைத்து விண்ணப்பங்களும் சாதாரண அல்லது விரைவான தானிக்கப் பதிவு முறையில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
சமயம், இனம், மொழி, அரசியல் எனக் குறிப்பிடப்பட்ட சங்கங்களுக்கான விண்ணப்பங்கள் சாதாரண தானியக்க முறையில் சமர்ப்பிக்கப்படுகின்றன. இதற்கு ஆழ்ந்து ஆராயப்பட்டு மதிப்பிடப்படும் செயல்முறை அதாவது தெளிவிற்காகப் பலமுறை விண்ணப்பதாரர்களை அணுக வேண்டியிருக்கலாம்.
மற்ற சங்கங்கள் யாவும் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துப் பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தினாலே கேள்விகள் ஏதும் கேட்கப்படாமல் பதிவு முடிந்துவிடும்.
இந்நிலையில் சங்கங்கள் சட்டத்தில் பரிந்துரைக்கப்படும் மாற்றங்கள், தானியக்க முறையில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் குறித்து சங்கங்கள் பதிவாளர் கூடுதல் தகவலறிய வகைசெய்யும்.
நாட்டு நலனுக்கும் பாதுகாப்புக்கும் முரணாக, அல்லது சட்டத்துக்குப் புறம்பான நோக்கங்களுக்குச் சங்கம் பயன்படுத்தும் சாத்தியம் உள்ளது என்று பதிவாளர் நம்பினால் விண்ணப்பத்தை நிராகரிக்கும் அதிகாரமும் அவருக்குத் தரப்படலாம்.
இவ்வாறு செயல்முறையைக் கடுமையாக்குவதால் குறிப்பிடப்படாத சங்கங்களாக இருந்துகொண்டே மிரட்டல் தரக்கூடிய, பதிவுக்குத் தகுதியில்லாத சங்கங்களைக் கண்டறியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சங்கங்கள் (திருத்தம்) சட்ட மசோதா உள்துறை, சட்ட, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சர் சுன் ஷுவெலிங்கால் திங்கட்கிழமையன்று நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்புக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஓராண்டுக்குச் சராசரியாகச் சுமார் 280 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் கிட்டத்தட்ட பாதி விண்ணப்பங்கள் தானியக்க முறையில் அமைந்தவை என்று உள்துறை அமைச்சு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.
சராசரியாக ஐந்து விண்ணப்பங்கள் ஆண்டுதோறும் நிராகரிக்கப்பட்டன என்றும் கூறப்பட்டது.

