பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு (இசிடிஏ) அதன் விசாரணை நெறிமுறையை வலுப்படுத்துவதுடன் பாலர் பள்ளி நடத்துநர்களுக்கான விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அண்மையில் நடந்ததாக நம்பப்படும் குழந்தைகள் துன்புறுத்தல் சம்பவங்களில் இருந்து எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்களைத் தடுப்பது குறித்த படிப்பினையைப் பெற்றதாகவும் அதுகூறியது.
இச்சம்பவங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த உள்துறை மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் திருவாட்டி சுன் ஷுவெலிங், இத்தகைய குற்றங்களில் நடத்துநர்களான தண்டனைகளைக் கடுமையாக்குவது குறித்து இசிடிஏ ஆராயும் என்றார்.
மேலும் இசிடி, இளம்பருவ வளர்ச்சிக்கான தேசியக் கல்விக் கழகம் (என்ஐஇசி), பயிற்சி வழங்குநர்களுடன் இணைந்து குழந்தைகளைக் கையாளும் பயிற்சிகளை மேம்படுத்தும். அதன் மூலம் அனைத்துக் கல்வியாளர்களும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தங்கள் கடமை குறித்து தெளிவாக இருப்பர் என்றார் அவர்.
பயிற்சிகள் குழந்தைப் பராமரிப்பில் பொருத்தமற்ற, தடைசெய்யப்பட்ட நடைமுறைகளை தெளிவாக விவரிப்பதாக அமைக்கப்படும். இதனால் கல்வியாளர்கள் தங்கள் பாலர் பள்ளிகளில் உள்ள தவறான நிர்வாக நடைமுறைகள் குறித்து கேள்வி எழுப்ப முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும், ஆக்ககரமான சூழலில் அவர்களின் வளர்ச்சி, மேம்பாட்டுக்கு ஆதரவளிப்பதற்கும் அமைச்சு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும். 2019ல் நடைமுறைக்கு வந்த தற்போதைய ஒழுங்குமுறை கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்றார் அவர்.
2024 ஜூலை முதல் அனைத்து பாலர் பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படுவது கட்டாயமாக்கப்படும் என்று இசிடிஏ ஆகஸ்ட் மாதம் அறிவித்தது.
முன்னேற்றம் சிங்கப்பூர் கட்சியின் தொகுதியில்லாத நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசல் புவா இந்த காலக்கெடுவை முன்னுக்கு கொண்டு வரமுடியுமா என்று கேட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அதற்கு பதிலளித்த திருவாட்டி சன் “குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கவலைகொண்டுள்ள பெற்றோரில் சிலர், விரைந்து சிசிடிவி கேமராக்களை அமைக்க வேண்டும் என எதிர்பார்ப்பதை அமைப்பு புரிந்துகொள்கிறது. அதே வேளையில், குழந்தைகள் மற்றும் ஊழியர்களின் தனி மனிதர் உரிமையைப் பாதுகாக்க, சரியான இடங்களில் கேமராக்களை வாங்குவதற்கும் நிறுவுவதற்கும் தேவையான நேரத்தை பாலர் பள்ளிகளுக்கு வழங்குவது முக்கியம்,” என்றார்.
ஒவ்வோர் ஆண்டும் பதிவுசெய்யப்பட்ட 100,000 குழந்தைகளில் கிட்டத்தட்ட 10 குழந்தைகள் தவறாக நடத்தப்படும் சம்பவங்களுக்கு உள்ளாகிறார்கள். அண்மைய ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என்று அவர் கூறினார்.
கிண்டர்லேண்டின் உட்லண்ட்ஸ் மார்ட் பாலர் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் குழந்தைகளை தண்ணீர் குடிக்க வற்புறுத்துவது, ஒரு குழந்தையின் பிட்டத்தில் புத்தகத்தால் அடிப்பதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, ஆகஸ்ட் மாதம் அச்சம்பவம் பொதுமக்கள் கவனத்துக்கு வந்தது.
முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியர் லின் மின், 33, ஆகஸ்டு 30ஆம் தேதி, ஒரு குழந்தையை முறைதவறி நடத்தியதாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். இது குழந்தைகள், இளையர்கள் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.
தவறான செயல்களுக்கான ஆதாரங்களை சேகரிப்பது தொடர்பாக ஊழியர்கள் தனிப்பட்ட கைப்பேசி சாதனங்களைப் பயன்படுத்துவது குறித்து சில உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பினர்.
குழந்தைகளின் புகைப்படங்கள், காணொளிகளின் முறையற்ற பயன்பாட்டைத் தடுக்க, ஆசிரியர்கள் கற்பிக்கும் நேரத்தில் தனிப்பட்ட சாதனங்களைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்படுவதில்லை என்று கிண்டர்லேண்ட் ஆகஸ்ட் 30ஆம் தேதியன்று அன்று ஒரு பேஸ்புக் பதிவில் கூறியிருந்தது. உட்லண்ட்ஸ் மார்ட் மையத்தில் குழந்தை துன்புறுத்தப்பட்ட சம்பவம், முன்னாள் ஆசிரியர் ஒருவரால் ரகசியமாக படம்பிடிக்கப்பட்ட காணொளி மூலம் வெளிச்சத்திற்கு வந்ததால், அந்த அறிக்கை பொதுமக்களிடமிருந்து விமர்சனத்தைப் பெற்றது.
பணியிடத்தில் தனிப்பட்ட கைப்பேசி சாதனங்களைப் பயன்படுத்துவதற்கான எந்தவொரு நடத்துனரின் விதிமுறையும், அவர்களது மையங்களில் ஏதேனும் தவறுகளை புகாரளிப்பது ஊழியர்களுக்குத் தடையாக இருக்கக்கூடாது என்று திருவாட்டி சன் வலியுறுத்தினார்.

