லஞ்சம்: ஆடவருக்கு எட்டு மாதம் சிறைத் தண்டனை

லஞ்சம்: ஆடவருக்கு எட்டு மாதம் சிறைத் தண்டனை

2 mins read
70e20085-16a2-488b-badb-80f1b1f297b2
ஷாங் ஜியாஹாவ். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எஸ்ஐஏயின் முன்னாள் ஊழியருடன் கூட்டு சதியில் ஈடுபட்டு லஞ்சம் பெற்ற ஆடவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அலங்கார வடிவமைப்பாளரான ரெக்ஸ் ஷாங் ஜியாஹாவ், 38, அபராதமாக 103,700 வெள்ளி செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் அவரிடம் பணமில்லாததால் கூடுதலாக 100 நாள் அவர் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

எஸ்ஐஏ சொத்துப் பிரிவு உதவி நிர்வாகியாக இருந்த லயனல் லோ ஜுன் ஜி, 36 என்பருடன் சேர்ந்து ஷாங் குற்றச் செயலில் ஈடுபட்டதாக வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சொந்த நலன்களுக்காக ஷாங் செயல்பட்டது தெளிவாக தெரிகிறது என்று நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

திரு லோ, எஸ்ஐஏ நிறுவனத்தில் புதுப்பிப்புப் பணிகளை நிர்வகித்து வந்தார்.

2018-2019ல் 24 வகுப்பறைகள் உட்பட இரண்டு மாடி கட்டுமானத்திற்கான குத்தகையை எஸ்ஐஏ வெளியிட்டது.

அப்போது லோ, புதுப்பிப்பு நிறுவனங்களை பரிந்துரை செய்யுமாறு ஷாங்கை கேட்டுக் கொண்டார்.

லோவும் ஷாங்கும் புதுப்பிப்பு நிறுவனத்துக்கு கட்டுமானக் குத்தகையை வழங்கி அதன் மூலம் கிடைக்கும் லஞ்சத்தை பிரித்துக்கொள்ள திட்டமிட்டனர்.

திரு லோ, திட்டத்தின் மதிப்பு 2.5 மில்லியன் வெள்ளி என்று ஷாங்கிடம் தெரிவித்தார். இந்தத் தகவலை புதுப்பிப்பு நிறுவனத்திடம் ஷாங் பகிர்ந்துகொண்டார்.

இதையடுத்து 2.17 மில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தக் குத்தகை லின் ஐடி குழுமத்துக்கு வழங்கப்பட்டது.

பின்னர் 2019ல் ஆறு காசோலைகள் மூலமாக 207,000 வெள்ளிக்கு மேற்பட்ட தொகையை ஆங்கிடமும் ஷாங்கிடமும் புதுப்பிப்பு நிறுவனம் வழங்கியது.

இந்தக் குற்றச் செயல் எப்படி தெரிய வந்தது என்பது பற்றி தகவல் இல்லை.

ஆனால் வழக்கில் சம்பந்தப்பட்ட மூவரும் 2022ல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

ஷாங் 20,000 வெள்ளி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வரும் நவம்பர் 2ஆம் தேதி சிறைத் தண்டனையை பூர்த்தி செய்ய ஷாங் நீதிமன்றத்தில் சரணடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்