சிங்கப்பூரில் 2023ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 71 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர்.
2022ஆம் ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 57.8 விழுக்காடு அதிகம். 2022ன் முற்பாதியில் சாலை விபத்துகளில் மாண்டோர் எண்ணிக்கை 45.
2023 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை, மரணம் விளைவித்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை 61.4% அதிகரித்தது. 2022ன் முதல் ஆறு மாதங்களில் அத்தகைய 44 விபத்துகள் பதிவாயின.
காவல்துறை திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆண்டின் முற்பாதியில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோரில் 32 பேர் மோட்டார் சைக்கிளோட்டிகள் அல்லது மோட்டார் சைக்கிளில் ஓட்டுநருக்குப் பின்னே அமர்ந்து பயணம் செய்தவர்கள். மேலும் 17 பேர் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயது நிரம்பியவர்கள்.
2022ன் முற்பாதியில் அவ்வாறு மாண்ட முதியோரின் எண்ணிக்கை 9ஆக இருந்தது.
2023 முற்பாதியில் காயம் ஏற்படுத்திய சாலை விபத்துகளின் எண்ணிக்கை 11.1% அதிகரித்து 3,471 ஆனது. அவற்றில் 4,479 பேர் காயமடைந்தனர்.
அனுமதிக்கப்பட்ட வேகத்திற்குமேல் வாகனத்தை ஓட்டிய சம்பவங்களும் போக்குவரத்து சமிக்ஞையில் சிவப்பு விளக்கின்போது நிற்காமல் சென்ற போக்கும் 2023ன் முதல் ஆறு மாதங்களில் குறைந்தது. இருப்பினும் இத்தகைய விபத்துகளில் மாண்டோர் எண்ணிக்கை அதிகரித்தது.
சாலை விபத்துகளில் காயமடைந்த முதியோர் எண்ணிக்கை 128ஆகப் பதிவானது. இத்தகைய விபத்துகளில் 37.2 விழுக்காட்டுச் சம்பவங்களுக்கு, முதியவர்கள் சாலை விதிகளை மீறி சாலையைக் கடக்க முயன்றது காரணம்.
அக்டோபர் மாதம், போக்குவரத்துக் காவல்துறை ‘ரிவார்ட் த பெடஸ்டிரியன்ஸ்’ எனப்படும் பாதசாரிகளுக்குப் பரிசளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன்கீழ், சிறந்த சாலைப் பாதுகாப்புப் பழக்கங்களைக் கடைப்பிடிக்கும் பாதசாரிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு அன்பளிப்புப் பைகள் வழங்கப்படும்.
2023ன் முற்பாதியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காகப் பிடிபட்டோர் எண்ணிக்கை சற்றே குறைந்து 785 ஆனது.
நவம்பர் மாதம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிரான பிரசார இயக்கத்தைப் போக்குவரத்துக் காவல்துறை தொடங்கவிருக்கிறது.