பொதுப் போக்குவரத்துக் கட்டணம் இவ்வாண்டு டிசம்பர் 23ஆம் தேதி முதல் அட்டை வழி கட்டணம் செலுத்தும் பெரியவர்களுக்கு 11 காசு வரை உயரவுள்ளது. இதுவரை பதிவான ஆக அதிகமான கட்டண உயர்வு இதுவாகும்.
பெரியவர்களுக்கான அட்டைக் கட்டணம் 4.2 கி.மீ. தூரம் வரையிலான பயணங்களுக்கு 10 காசு உயர்வதாகவும் 4.2 கி.மீ. தூரத்தை மிஞ்சும் பயணங்களுக்கு 11 காசு உயர்வதாகவும் பொதுப் போக்குவரத்து மன்றம் (பிடிசி) அதன் வருடாந்திர கட்டண மறு ஆய்வை அடுத்து திங்கட்கிழமையன்று தெரிவித்தது.
பயண அட்டை பயன்படுத்தும் முதியவர்கள், மாணவர்கள், உடற்குறையுள்ளோர், குறைந்த வருமான ஊழியர்கள் ஆகியோருக்கான சலுகைக் கட்டணம் 4.2 கி.மீ. தூரம் வரையிலான பயணங்களுக்கு 4 காசு உயர்வதாகவும் அதற்கும் மேல் அதிக தூரமுள்ள பயணங்களுக்கு 5 காசு உயர்வதாகவும் கூறப்பட்டது. இப்பிரிவில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் பயணிகள், அல்லது சிங்கப்பூரர்களில் பாதிப் பேர் உள்ளதாக அறியப்படுகிறது.

முன்னதாகப் பயணக் கட்டணம் 2019ஆம் ஆண்டில் 7% உயர்ந்ததை அடுத்து இவ்வாண்டின் கட்டண உயர்வே இதுவரை ஆக அதிகமானதாக அமைந்துள்ளது.
இதற்கிடையே, பயணக் கட்டணங்கள் 22.6% வரையில் 2023ல் அதிகரித்திருக்கலாம் என்று பிடிசி தெரிவித்தது. 1998ஆம் ஆண்டிலிருந்து ஆக அதிகமாக அனுமதிக்கப்படும் விகிதம் இது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ள பயணக் கட்டண உயர்வுக்கு, 2022ல் எரிசக்தி விலைகளில் ஏற்பட்ட 62.3% உயர்வே முக்கியக் காரணம் என்று மன்றம் சுட்டியது.
அதிகப்படியான எரிசக்தி விலைகள், போட்டித்தன்மைமிக்க ஊழியர் சந்தை, மெதுவாகவும் நிச்சயமற்றதாகவும் மீண்டுவரும் பயணங்கள் ஆகியவற்றைக் காரணங்காட்டி ‘எஸ்பிஎஸ் டிரான்சிட்’, ‘எஸ்எம்ஆர்டி டிரெய்ன்ஸ்’ போக்குவரத்து நிறுவனங்கள் இந்த 22.6% கட்டண உயர்வை 2023ல் அமல்படுத்த விண்ணப்பித்துள்ளன.
இருப்பினும் தற்போதைய ‘அதிகப்படியான செலவுகள் நிறைந்த சூழல்’ கருதி பயணக் கட்டணத்தைக் கட்டுப்படியாக வைத்திருப்பதற்காக பிடிசி இந்த அதிகபட்ச 22.6% கட்டண உயர்வை நிராகரித்துவிட்டது.
பேருந்துப் பயணங்களுக்கு ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான எண்ணிக்கையிலான பயணிகள் மட்டுமே ரொக்கம் செலுத்துவதாகவும் கூறப்பட்டது.
குறைந்த வருமான ஊழியர்க்குப் புதிய மாதாந்திர சலுகைக் கட்டண அட்டை
இதற்கிடையே, டிசம்பர் 23ஆம் தேதி முதல் குறைந்த வருமான ஊழியர்களுக்காக அரசாங்கம் புதிய மாதாந்திர சலுகைக் கட்டண அட்டை ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. பேருந்திலும் ரயிலிலும் பயன்படுத்தக்கூடியது இந்த $96 மதிப்புடைய அட்டை. பெரியவர்கள் தங்களின் மாதாந்திர பயண அட்டைகளுக்குத் தற்போது $128 செலுத்தி வரும் நிலையில் இப்புதிய அட்டை $32 வித்தியாசத்தில் விலை குறைத்து விற்கப்படும்.
மற்ற சலுகைக் கட்டணப் பிரிவினரான முதியோர், தேசிய சேவையாளர்கள், மாணவர்கள் ஆகியோர் இத்தகைய இருவகைப் பயணங்களுக்கான மாதாந்திர அட்டைக்குச் செலுத்தும் கட்டணத்தில் 10 விழுக்காட்டுக் கழிவைப் பெறலாம். இதனால் கட்டணம் $4.50 முதல் $9.50 வரை இருக்கும்.
உடற்குறையுள்ளோருக்கான மாதாந்திர சலுகைப் பயண அட்டையின் விலை 64 வெள்ளியிலிருந்து 58 வெள்ளியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்களால் சுமார் 60,000 பேர் பலனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டண உயர்வை சிங்கப்பூரர்கள் சமாளிக்க உதவ, தனிநபர் மாத வருமானமாக $1,600 வரை ஈட்டுவோரின் குடும்பங்களுக்கு தலா $50 பெறுமானமுள்ள பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகளை அரசாங்கம் வழங்கும்.