பாலர் பள்ளிகளில் படக்கருவி நிறுவுவதில் கவனம்

பாலர் பள்ளிகளில் படக்கருவி நிறுவுவதில் கவனம்

2 mins read
60dfc151-2a6a-40cd-bf51-7cb4a1abf555
பாலர் பள்ளி ஒன்றில் நிறுவப்பட்டுள்ள படக்கருவி - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு, அனைத்து பாலர் பள்ளிகளிலும் கண்காணிப்புக் கேமரா இருப்பதை கட்டாயமாக்கியுள்ளது.

ஆனால் அவற்றை எப்படி, எந்த இடத்தில் நிறுவ வேண்டும் என்பதில் கவனம் தேவை என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள், அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் ஆகியோரின் தனிப்பட்ட சுதந்திரத்தை பாதிக்காதவண்ணம் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

வகுப்பறைகள் உட்பட ஆசிரியரோடு குழந்தைகள் அதிகமாக இருக்கும் இடத்தில் படக்கருவிகளை நிறுவ வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் சுன் சொன்னார்.

அதே சமயத்தில் பள்ளிகளில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிப்பதற்காக அதிகளவு மின்னிலக்க சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக அவர் எச்சரித்தார்.

மின்னிலக்க கண்காணிப்புச் சாதனைங்களை நம்பியிருப்பதற்கு பதில் குழந்தைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அனைத்துப் பாலர் பள்ளிகளிலும் அரசாங்க நிதியுதவி பெறும் குழந்தைகளுக்கான, சிறுவர்களுக்கான ஆரம்பக்கால குறுக்கீட்டு நிலையங்களிலும் அடுத்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதிக்குள் படக் கருவிகள் கட்டாயம் நிறுவப்பட வேண்டும் என்று பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு உத்தரவிட்டது.

இந்த நிலையில் இதற்கு போதுமான அவகாசம் வழங்கப்பட்டுள்ளதா என்று நேற்று நாடாளுமன்றத்தில் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினரான ஹேசல் புவா கேள்வியெழுப்பினார்.

அமைச்சர் சுன், படக்கருவிகளைத் தருவித்து நிறுவ அவகாசம் வழங்குவது முக்கியம் என்று கூறினார்.

அறுபது விழுக்காடு பாலர்பள்ளி, குறுக்கீட்டு நிலையங்களில் படக்கருவிகள் நிறுவப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கழிவறை போன்ற இடங்களில் ஒலிப்பதிவு சாதனைங்களை நிறுவ யோசனை கூறிய தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஜோன் பெரேராவுக்குப் பதிலளித்த அமைச்சர், தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாக ஆசிரியர்களும் பெற்றோர்களும் கருதுவதாகத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்