2024 முதல் 2026 வரை 14,000 ஈரறை வீடுகள் அறிமுகம்: டெஸ்மண்ட் லீ

ஒற்றையர், முதியோருக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 14,000 ஈரறைகள் கொண்ட தேவைக்கேற்பக் கட்டப்படும் (பிடிஓ) அடுக்குமாடி வீடுகளை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) விற்பனைக்கு விடவுள்ளது.

கடந்த 2021 முதல் 2023 வரை அறிமுகம் செய்யப்பட்டதைக் காட்டிலும் அந்த எண்ணிக்கை 30 விழுக்காடு அதிகம் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்கால பிளஸ், முதன்மை பிடிஓ திட்டங்களில் அதிக ஈரறை வீடுகள் இடம்பெறுமா என்று ஜூரோங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு சியே யாவ் சுவென்னின் கேள்விக்கு திரு லீ பதிலளித்தார்.

வரும் 2024ன் இரண்டாம் பாதியிலிருந்து நடைமுறைக்கு வரும் புதிய பொது வீடமைப்பு கட்டமைப்பின்கீழ், 35 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடைய ஒற்றையர், அனைத்து பிடிஓ திட்டங்களிலும் இத்தகைய அடுக்குமாடி வீடுகளுக்கு விண்ணப்பிக்கலாம். தற்போது முதிர்ச்சியடையாத பேட்டைகளில் மட்டுமே அவர்கள் புதிய ஈரறை ஃபிளெக்ஸி வீடுகளை வாங்க முடியும்.

பிடிஓ வீடுகளுக்கு தற்போது 4 முதல் 4½ ஆண்டுகள் வரையாக இருக்கும் என்ற சராசரி காத்திருப்புக் காலத்தை 2024க்குள் மூன்று முதல் நான்கு ஆண்டுகளாக குறைக்கவும் வீவக செயல்பட்டு வருவதாக திரு லீ கூறினார்.

வீவக அடுக்குமாடி வீடுகளை மறுவகைப்படுத்துவது குறித்து நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகளை முன்வைத்தனர்.

இதன்கீழ், தேர்வு செய்யப்படும் இடங்களில் உள்ள பிடிஓ வீடுகள் முதன்மை, பிளஸ் வகைகளின் கீழ் வரும்.

அவை 10 ஆண்டுகள் குறைந்தபட்ச குடியிருப்பு (எம்ஓபி), மானியத்தை திரும்பப் பெறுதல் போன்ற கடுமையான மறுவிற்பனை நிபந்தனைகளுடன் வரும்.

இது குடியிருப்புப் பேட்டைகளை முதிர்ந்த அல்லது முதிர்ச்சியடையாத என வகைப்படுத்தும் வீவகவின் தற்போதைய கட்டமைப்பை மாற்றும்.

பிளஸ், முதன்மை அடுக்குமாடி வீடுகளுக்கு இடையேயான விற்பனை, மறுவிற்பனைகளில் தெளிவான வேறுபாட்டை ஏற்படுத்த, பிளஸ் வீடுகளுக்கான 10 ஆண்டுகள் குறைந்தபட்சக் குடியிருப்புக் காலத்தைக் குறைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்குமா என்றும் திரு சியே கேட்டார்.

அரசாங்கம் இதைக் கவனமாக பரிசீலித்ததாகக் கூறிய திரு லீ, பெரும்பாலான சிங்கப்பூர் குடும்பங்கள் தங்களுடைய வீவக வீட்டை விற்பதற்கு முன் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் அவ்வீட்டில் வசிப்பதாகக் குறிப்பிட்டார்.

காலக்கெடு முடிவதற்குள் வீட்டை விற்க விழைவோரின் விண்ணப்பங்கள், அந்தந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்றார் அவர்.

முதன்மை, பிளஸ் வீடுகளுக்கு அதிக விலை வரம்பை விதிக்கும் திரு சியேயின் பரிந்துரை, வீடுகளின் தன்மைகளை விலை முழுமையாகப் பிரதிபலிக்காது என்பதால் சரியானதாக இருக்காது என்று திரு லீ கூறினார்.

அதற்குப் பதிலாக, வேறுபட்ட வருமானங்களைக் கொண்டவர்கள் பிளஸ், முதன்மை வீடுகளைப் பெற கூடுதல் மானியங்களை அரசாங்கம் வழங்கும் என்றார் அவர்.

முதன்மை, பிளஸ் அடுக்குமாடி வீடுகள் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகே மறுவிற்பனைச் சந்தைக்கு வரும் என்பதைச் சுட்டிய திரு லீ, கடுமையான கட்டுப்பாடுகள் நீண்ட காலத்தில் மறுவிற்பனை விலையை மட்டுப்படுத்தலாம் என்றார்.

பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளரும் அல்ஜுனிட் குழுத்தொகுதி உறுப்பினருமான பிரித்தம் சிங், புதிய கட்டமைப்பின்கீழ் முதன்மை, பிளஸ் வீவக அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு எதிர்பார்க்கப்படும் நிதித் தாக்கம் பற்றி கேட்டார்.

“முதன்மை, பிளஸ் குடியிருப்புகள் அதிக மானியங்களுடன் வருவதால், தற்போதைய நிலையில் இருந்தால் மொத்த நிதித் தாக்கம் அதிகமாக இருக்கும்,” என்று அமைச்சர் லீ பதிலளித்தார்.

எதிர்பார்க்கப்படும் நிதித் தாக்கம், சந்தை நிலவரம், வீட்டுத் தேவை, அமைந்துள்ள இடம் போன்ற காரணிகளைப் பொறுத்தது.

பெரும்பான்மையான வீடுகள் முதல் முறை வாங்கும் குடும்பங்களுக்கே தொடர்ந்து ஒதுக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

புதிய கட்டமைப்பின்கீழ், முதல் முறை வீடு வாங்கும் குடும்பங்கள் அனைத்து பிடிஓ திட்டங்களிலும் இரண்டு வாக்கு வாய்ப்புகளைப் பெறும்.

முதல்முறை வீடு வாங்கும் பெற்றோர், திருமணமான தம்பதிகள் பெற்றோருக்குரிய முன்னுரிமைத் திட்டத்தின்கீழ் மூன்று வாக்குச் சீட்டு வாய்ப்புகளையும் கூடுதல் முன்னுரிமையையும் பெறுவார்கள்.

வெவ்வேறு குழுக்களுக்கான குறிப்பிட்ட முன்னுரிமை, ஒதுக்கீடுகள் பற்றிய கூடுதல் விவரங்கள் தயாரானதும் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் லீ தெரிவித்தார்.

பிடிஓ வீடு வாங்குவதற்கான தற்போது 35 ஆக உள்ள ஒற்றையருக்கான வயது வரம்பைக் குறைக்க முடியுமா என்ற மவுண்ட்பேட்டன் தொகுதி உறுப்பினர் லிம் பியாவ் சுவானின் கேள்விக்குப் பதிலளித்த அவர், “வரும் ஆண்டுகளில் போதிய வீடுகளைக் கட்டுவதும் தேவைகளைப் பூர்த்தி செய்வதுமே அரசாங்கத்தின் தற்போதைய முன்னுரிமை,” என்று கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!