சிங்கப்பூரில் கடந்த மே மாதம் முதல், பயன்படுத்தப்பட்ட பொருள்களை இலவசமாகத் தருவதாகக் கூறும் மோசடி விளம்பரங்களில் ஏறக்குறைய 360 பேர், 43,000 வெள்ளியை இழந்தனர்.
ஃபேஸ்புக், டெலிகிராம், வாட்ஸ்அப் போன்ற தளங்கள் மூலம் இவ்வாறு விளம்பரம் செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
பயன்படுத்தப்பட்ட சைக்கிள், சலவை இயந்திரம், குளிர்பதனப் பெட்டி எனப் பலதரப்பட்ட பொருள்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று அந்த விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்டோர் அந்த விளம்பரதாரர்களைத் தொடர்புகொண்டபோது விநியோகக் கட்டணம் அல்லது முன்பதிவுக் கட்டணம் செலுத்தும்படி மோசடிக்காரர்கள் கேட்டதாகத் தெரிகிறது.
கட்டணம் செலுத்திய பிறகும் பொருள் வந்து சேராத நிலையில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்ந்தனர்.
இந்த ஆண்டுக்கான (2023) மோசடிகளில் பாதிக்கப்பட்டோர் தொடர்பான ஆண்டிடைப் புள்ளிவிவரங்கள் சென்ற புதன்கிழமை வெளியாயின. அதில் சென்ற ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்புநோக்க, மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை 64.5 விழுக்காடு அதிகரித்ததாக அவ்வறிக்கை கூறியது.
இருப்பினும், பாதிக்கப்பட்டோர் இழந்த தொகை சற்றே குறைந்து 334.5 மில்லியன் வெள்ளியாக இருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.