குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் (ஐசிஏ) மின்னிலக்கமாக்கல் முயற்சிகளிலும், விரும்பத்தகாதவர்களுக்கு எதிரான எல்லைக் கட்டுப்பாடுகளை வலுப்படுத்தவும் குடிநுழைவுச் சட்ட மாற்றங்கள் வகைசெய்யும்.
மேலும், ஏற்படும் சவால்களைத் திறம்படச் சமாளிக்கவும், குடிநுழைவு அனுமதிகளை சிறப்பாக நிர்வகிக்கவும் மாற்றங்கள் உதவும்.
குடிநுழைவு (திருத்தங்கள்) மசோதா நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை நிறைவேற்றப்பட்டது.
2024 முதல் அனைத்துப் பயணிகளுக்கும் தடையற்ற குடிநுழைவு அனுமதியை வழங்க விழையும் ஆணையத்தின் புதிய முறைக்கு இந்த மாற்றங்களில் சில வழிவகுக்கும்.
2024 முதல் பாதியில் இருந்து சாங்கி விமான நிலையத்தில் ஒட்டுமொத்தப் புறப்பாடு செயல்முறையும் அங்க அடையாளத்தைப் (பயோமெட்ரிக்ஸ்) பயன்படுத்துவதாக்குவதற்கான தானியக்க நிலையங்களை அமைக்கும் திட்டமுள்ளது. அங்க அடையாளம் மூலம் உறுதிப்படுத்தும் ஒற்றை சாதனம் (டோக்கன்) உருவாக்குவதன் மூலம் இது செய்யப்படும். பயணப் பெட்டிகளைச் செலுத்துவது முதல் குடிநுழைவு சோதனைகள் வரை அனைத்துக்கும் எல்லா இடத்திலும் இதனைப் பயன்படுத்தலாம்.
குடிநுழைவுச் சட்டத்தின் அண்மைய மாற்றங்கள், பிரதிகளுக்குப் பதிலாக மின்னிலக்க அனுமதிகளைப் பயன்படுத்த அனுமதிக்கிறது.
மேலும் ஆணைய அதிகாரிகளின் அதிகாரங்களை விரிவுபடுத்துவதன் மூலம் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் உதவுகின்றன.
முன்னதாக, சோதனைச் சாவடி போன்ற அங்கீகரிக்கப்பட்ட பகுதிக்குள் அல்லது அதற்கு அருகில் செய்யப்பட்ட குடிநுழைவு/ குடிநுழைவு சாராத குற்றங்கள் தொடர்பானவர்களை கைது செய்யும் அதிகாரம் இருந்தது.
குடிநுழைவு சாராத குற்றங்களுக்காக எந்த இடத்தில் குற்றம் நடந்தாலும் கைதுநடவடிக்கைக்கு திருத்தங்கள் அனுமதிக்கின்றன.
சட்டத்தின் ஏனைய மாற்றங்கள் ஏற்படும் சவால்களைச் சமாளிக்க ஆணையத்துக்கு உதவுகிறது.
தரைவழிச் சோதனைச் சாவடிகள் வழியாக சிங்கப்பூருக்குள் பேருந்துகள் நுழைவதற்கு முன்னரே, பயணிகளின் தகவல்களை முன்கூட்டியே சமர்ப்பிக்குமாறு பேருந்து நடத்துநர்களைக் கேட்க அதிகாரம் அனுமதிக்கப்படுகிறது.
புதிய மாற்றங்களின்படி, விரும்பத்தகாதவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைவதைத் தடுக்க, அவர்களைச் சோதனைச் சாவடிகளில் திருப்பி அனுப்புவதற்குப் பதிலாக அவர்களுக்குத் தரையிறங்க அனுமதி மறுக்கும் உத்தரவுகளை குடிநுழைவுக் கட்டுப்பாட்டாளர் வழங்கலாம்.
மாற்றங்களின் மற்றொரு அம்சம் குடிநுழைவு அனுமதி, அனுமதி நிர்வாகத்தை உள்ளடக்கியது.
இனிமேல், நிரந்தரவாசத் தகுதி காலாவதியான ஆறு மாதங்களில் மறு நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம். முன்னர் இது ஒரு மாத காலமாக இருந்தது.
சிங்கப்பூரின் புதிய குடிநுழைவுத் திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்த இந்த மாற்றங்கள் வகைசெய்யும் என்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மசோதா மீதான உரையில், உள்துறை இரண்டாவது அமைச்சர் திருவாட்டி ஜோசஃபின் டியோ கூறினார்.
மின்னிலக்கமாக்கப்பட்ட சேவைகள் பயணிகளுக்கு பயனளிப்பதுடன் சிங்கப்பூரின் குடிநுழைவு செயல்முறைகளை மேம்படுத்தும். உலகத் தரம் வாய்ந்த போக்குவரத்து மையமாகவும் இடமாகவும் தன் நிலையைத் தக்கவைத்துக்கொள்ள சிங்கப்பூருக்கு உதவும் என்றும் அவர் கூறினார்.
எனினும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணையப் பாதுகாப்பு, அங்க அடையாளத் தரவு சம்பந்தப்பட்ட தரவு ஊடுருவல்களின் சாத்தியம் குறித்து கவலை எழுப்பினர்.
தரவு குறியாக்கம் செய்யப்படும் என்றும், பாதிப்புகளை அடையாளம் கண்டு நிவர்த்தி செய்யும் ஆணையத்தின் செயல்முறைகளுடன் கூடுதலாக, உள்துறைக் குழுவின் அறிவியல், தொழில்நுட்ப முகவை (எச்டிஎக்ஸ்) இதுதொடர்பான சோதனைகளை மேற்கொள்கிறது என்றும் அமைச்சர் கூறினார்.
தரவு ஊடுருவல் இடம்பெறும் பட்சத்தில் இந்த அமைப்புகள் உடனடியாக விசாரணைகளை நடத்தி, அதனைத் தடுக்கும். ஊடுருவல் அளவைக் கண்டறிந்து மேலும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் என்றார் அமைச்சர்.