கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றம்: ஆடவர் மீது குற்றச்சாட்டு

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றம்: ஆடவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
4cbbd724-0a82-45de-9834-0f6f23dadf80
பெண் ஒருவரை ஏமாற்றி $150,000 பறிக்கப்பட்டது. - படம்: தமிழ் முரசு

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றத்தில் ஈடுபட்டதாக ஆடவர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மோசடியிலிருந்து பெறப்பட்ட $150,000 தொகை அவருக்குக் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்தக் குற்றத்தை பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த மோர்ட்டெல் வெர்ஜிலோ ஜூனியர் மார்ஷியல் இம்மாதம் 7ஆம் தேதியன்று புரிந்ததாக நம்பப்படுகிறது.

அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் சாலை அருகில் உள்ள பேஷோர் சாலை கூட்டுரிமை வீட்டில் சூ சுவீ லீ என்பவரிடமிருந்து மார்ஷியல் ரொக்கம் பெற்றுக்கொண்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.

சமூக ஊடகம் மூலம் அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவரால் தாம் ஏமாற்றப்பட்டதாகப் பெண் ஒருவர் புகார் செய்தார் என்று காவல்துறை தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட பெண் வெவ்வேறு நாள்களில் பெருமளவிலான தொகையைத் தமது வங்கிக் கணக்கிலிருந்து எடுத்து ஆடவருக்கு $150,000 கொடுத்ததாக அறியப்படுகிறது.

இதுகுறித்து மத்திய காவல்துறை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி மார்ஷியலைக் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கைது செய்தனர்.

புகார் அளிக்கப்பட்டு ஐந்து மணி நேரத்தில் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

லூக்கஸ் என்பவரிடம் மட்டுமே தமக்குத் தொடர்பு இருப்பதாக மார்ஷியல் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

மோசடி குறித்து காவல்துறை மேல் விவரங்களை வெளியிடவில்லை.

மோசடி குற்றம் புரிய மார்ஷியல் பயன்படுத்திய பல பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மார்ஷியல் மத்திய காவல்துறைப் பிரிவில் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் தொடர்பான வழக்கு அடுத்த செவ்வாய்க்கிழமையன்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.

குற்றச் செயல் மூலம் பெறப்படும் பணத்தைக் கையாண்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டுகள் வரை சிறைத் தண்டனை, $50,000 வரை அபராதம் விதிக்கப்பட்டலாம்.

குறிப்புச் சொற்கள்