தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘கொவிட்-19க்கு எதிரான புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசி அக்டோபர் இறுதியில் வந்துவிடும்’

3 mins read
14dfdf90-4bcc-4f7d-a65f-d27a0954b48c
புதிய வகை கிருமிகளால் விளையக்கூடிய பாதிப்புகளைத் தடுப்பது மிகவும் அவசியம் என்பதால், புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்குக் கட்டணம் வசூலிக்கும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என்று கூறப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கொவிட்-19 புதிய கிருமித் திரிபுகளை எதிர்கொள்ளக்கூடிய புதுப்பிக்கப்பட்ட கமிர்னாட்டி தடுப்பூசி மருந்துகள் அக்டோபர் மாத இறுதிக்குள் சிங்கப்பூர் வந்து சேர்ந்துவிடும் என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.

புதிய வகை கிருமிகளால் விளையக்கூடிய பாதிப்புகளைத் தடுப்பது மிகவும் அவசியம் என்பதால், புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்குக் கட்டணம் வசூலிக்கும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.

முன்னைய ஓமிக்ரான் கிருமி வகைகளைக் காட்டிலும் கொவிட்-19 புதிய கிருமித் திரிபுகளில் கூடுதல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பிறழ்வுகள் உள்ளன.

“அதிர்ஷ்டவசமாக, தற்போதைய தடுப்பூசி மருந்துகள் கடுமையான நோய்களிலிருந்து தனிநபர்களைக் காப்பாற்றக்கூடியவையாக உள்ளன என்பதை அறிவியல் மற்றும் அனுபவ ஆதாரங்கள் காட்டுகின்றன,” என்றார் டாக்டர் ஜனில்.

“புதுப்பிக்கப்பட்ட கமிர்னாட்டி தடுப்பூசி மருந்துகள் பற்றி கொவிட்-19 தடுப்பூசி தொடர்பான நிபுணர்கள் குழு தற்போது ஆராய்ந்து வருகிறது. அந்த தடுப்பூசி மருந்தை யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம் என்று அக்குழு பரிந்துரைக்கும்,” என்றும் அமைச்சர் விவரித்தார்.

தற்போது, சுகாதார அமைச்சு 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய முதியவர்களும், மூத்தோருக்கான பராமரிப்பு இல்லங்களில் வசிப்போரும், மருத்துவ ரீதியாக பாதிப்படையக்கூடியவர்களும் தாங்கள் கடைசியாகப் போட்டுக்கொண்ட பூஸ்டர் கூடுதல் தடுப்பூசிக்குப் பிறகு ஓராண்டு கழித்து புதுப்பிக்கப்பட்ட கமிர்னாட்டி தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்று வலுவாகப் பரிந்துரைக்கிறது.

ஃபைசரின் XBB 1.5 தடுப்பூசி மருந்துக்கு சுகாதார அறிவியல் ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது. அதை ஆறு மாதக் குழந்தை முதல் அனைவரும் போட்டுக்கொள்ளலாம். XBB 1.5 தடுப்பூசி மருந்துகள், புதுப்பிக்கப்பட்ட கமிர்னாட்டி தடுப்பூசி மருந்துகள் ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகு ஆணையம் அந்த அனுமதியை வழங்கியது.

12 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட ஆரோக்கியமான மக்களும் 2023ல் கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். அது தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படும் என்றும் டாக்டர் ஜனில் சொன்னார்.

“கொவிட்-19 தடுப்பூசிகளுக்குக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் இல்லை. கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க தடுப்பூசிதான் இன்னும் சிறந்த பாதுகாப்பாக விளங்குகிறது,” என்றும் அவர் கூறினார்.

தஞ்சோங் பகார் குழுத் தொகுதி எம்.பி. ஜோன் பெரேரா, சிங்கப்பூரின் தடுப்பூசி திட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட கமிர்னாட்டி தடுப்பூசி உள்ளடக்கப்பட்டுள்ளதா என்று கேட்டார்.

பீஷான்- தோ பாயோ குழுத் தொகுதி எம்.பி. சக்தியாண்டி சுப்பாட், சிங்கப்பூரர்களுக்குத் தொடர்ந்து பூஸ்டர் எனும் கூடுதல் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படுமா என்று கேட்டார்.

அதற்குப் பதிலளித்த டாக்டர் ஜனில், “கொவிட்-19 கிருமி திடீரென்று வலுவற்ற நோயாக மாறிவிட்டதால், சிங்கப்பூர் பச்சை நிற எச்சரிக்கை நிலையை அடைந்துவிடவில்லை.

“அது இன்னும் ஆபத்தான நோய்தான். அபாயத்துக்குள்ளானவர்களையும் முதியவர்களையும் அது அதிகம் பாதிக்கக்கூடியது. இப்போது அக்கிருமியுடன் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதற்கு, தடுப்பூசிகளும் கிருமிப் பரவலுக்கு எதிரான பாதுகாப்பு நடைமுறைகளும்தான் காரணம்,” என்றார்.

சுகாதாரப் பராமரிப்பு தொடர்பான இடங்களில் முகக் கவசம் அணியும் நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்படுமா என்று கேட்டதற்கு, சுகாதார அமைச்சு விரிவான நோய்ப் பரவல் சூழ்நிலையைக் கவனமாக ஆராய்ந்து அதற்கேற்ப அதன் அணுகுமுறையில் தேவை ஏற்பட்டால் மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும் என்றும் அமைச்சர் ஜனில் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்