2020 பொதுத் தேர்தலில் வாக்களித்த 1,000க்கு மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் தவறுதலாக வாக்காளர் அல்லாத பட்டியலில் சேர்க்கப்பட்டதால், அவர்களால் அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை.
ஆனால், இப்போது அவர்கள் அனைவரின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டன. இதன் தொடர்பில் அல்ஜுனிட் குழுத் தொகுதி எம்.பி. பிரித்தம் சிங் கேட்ட கேள்விக்கு பொதுச் சேவைத் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் சான் சுன் சிங் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற எழுத்துபூர்வ பதிலில் இவ்வாறு தெரிவித்தார்.
தேர்தல் ஆணை பிறப்பிக்கப்பட்டது முதல் வாக்களிப்பு தினமான செப்டம்பர் 1ஆம் தேதி வரை, 1,093 சிங்கப்பூரர்கள் 2020 பொதுத் தேர்தலில் வாக்களித்த தங்களுக்கு அதிபர் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை கிடைக்கவில்லை என்று தேர்தல் துறையிடம் தெரிவித்தனர் என்றார் திரு சான்.
ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை இவ்வாறு தெரிவித்தவர்கள் எண்ணிக்கையை விட இது சுமார் 200 பேர் அதிகம்.
2020 பொதுத் தேர்தலின்போதுதான் அறிமுகமான மின்னியல் பதிவு முறை, பாதிக்கப்பட்டவர்களின் அடையாள அட்டையின் விவரங்களை சரிவர பதிவு செய்யவில்லை என்பதுதான் இந்தக் குளறுபடிக்குக் காரணமாக இருக்கலாம் என்றார் திரு சான்.
வரும் தேர்தல்களின்போது, வாக்காளர் அல்லாத பட்டியலில் இடம்பெற்றுள்ள சிங்கப்பூரர்களுக்கு தனிப்பட்ட முறையில் அவர்களின் வாக்காளர் நிலையைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படும் என்று இதற்கு முன் அவர் தெரிவித்த இந்தத் தகவலை திரு சான் செவ்வாய்க்கிழமை மறுவுறுதிப்படுத்தினார்.
அவர்களுக்கு மின்னஞ்சல் வழியாகவும் சிங்பாஸ் செயலி வழியாகவும் தெரிவிக்கப்படும்.
சிங்கப்பூரில் தகுதி பெற்ற அனைவரும் தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமானது.
தொடர்புடைய செய்திகள்
மற்றொரு கூடுதல் கேள்வியில் புக்கிட் பாஞ்சாங் தொகுதி எம்.பி. லியாங் எங் ஹுவா, சிங்கப்பூரில் வாக்களிப்பது கட்டாயம் என்ற நிலை இருக்கும்போது, ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் ஏன் தேர்தல் துறை தானாக வாக்காளர் தகுதிநிலையை மேம்படுத்துவதில்லை என்று கேட்டார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் சான், “உண்மைதான். சிங்கப்பூரில் வாக்களிப்பது கட்டாயம் என்பதால், முன்னைய தேர்தலில் வாக்களிக்காதவர்களை வாக்காளர் பதிவேட்டிலிருந்து அகற்ற வேண்டும் என்பது தேர்தல் சட்டத்தில் உள்ளது,” என்றார்.
வாக்களிக்காததற்கு ஒரு முறையான காரணம் தெரிவிக்காதவர்கள் தங்கள் பெயரை மீண்டும் வாக்காளர் பதிவேட்டில் இடம்பெறச் செய்ய $50 கட்டணம் செலுத்த வேண்டும். வாக்களிப்பு தினத்தில் வெளிநாட்டில் இருந்ததை போன்ற ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணம் தெரிவிக்கப்பட்டால் அக்கட்டணத்தைச் செலுத்த தேவையிராது.

