சாஸ் எனப்படும் சமூக சுகாதார உதவித் திட்ட அட்டையின் நிலையை உயர்த்தும் மேல்முறையீட்டில் நான்கில் மூவருக்கு வெற்றி கிட்டியுள்ளது என்று சுகாதார அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கள் சாஸ் அட்டையின் நிலையை உயர்த்த 14,000 மேல்முறையீடுகள் சுகாதார அமைச்சுக்குக் கிடைக்கப் பெற்றன என்றார் அவர்.
ஒவ்வொரு மேல்முறையீட்டையும் அமைச்சு தனிப்பட்ட முறையில், விண்ணப்பதாரர்களின் நிதி நிலை, குடும்பச் சூழ்நிலை, குடும்ப வருமானம், அவர்கள் வீட்டின் வருடாந்திர மதிப்பு போன்றவற்றை ஆராயும்,” என்றும் கூறினார் திருவாட்டி ரஹாயு.
அண்மைய பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, நீலம் மற்றும் ஆரஞ்சு நிற சாஸ் அட்டையின் வருமான வரம்பு உயர்த்தப்படுமா, அண்மைய உயர் மருத்துவ பணவீக்கத்தால் அதன் கட்டணக் கழிவுகளும் மறுஆய்வு செய்யப்படுமா போன்ற கேள்விகளுக்கு திருவாட்டி ரஹாயு பதிலளித்தார்.
“சாஸ் பயனாளர்களின் வருமான வரம்பும் சுகாதாரப் பராமரிப்புக் கட்டணக் கழிவுகளையும் சுகாதார அமைச்சு அவ்வப்போது மறுஆய்வு செய்து வருகிறது. அதன்படி, சாஸ் கட்டணக் கழிவு நிலையும் சாஸ் வருமான வரம்பும் கடைசியாக 2019ல் மறுஆய்வு செய்யப்பட்டன.
“அடுத்த ஆண்டிலிருந்து, சாஸ் அட்டை வைத்திருப்பவர்கள் மேலும் ஆரோக்கியமான (ஹெல்தியர் எஸ்ஜி) திட்டத்தின் சலுகைகளையும் அனுபவிக்கலாம். அதற்கு அவர்கள் ஹெல்தியர் எஸ்ஜி திட்டத்தில் இணைந்துள்ள தனியார் மருந்தகத்தில் பதிந்திருக்க வேண்டும்.
நாட்பட்ட நோய்களுக்கான உயர் தேவை மருந்துகளுக்கும் கட்டணங்களுக்குமான மேம்பட்ட கழிவுகளைப் பெறவும் பலதுறை மருந்தகத்தில் பெறக்கூடிய குறிப்பிட்ட சில பொதுவான மருந்துகளைக் கட்டுப்படியான விலையில் பெறவும் இது வழிவகுக்கும்,” என்றார் ரஹாயு.
2012ல் அறிமுகப்படுத்தப்பட்ட சாஸ் திட்டத்திற்குத் தகுதிபெறும் சிங்கப்பூரர்கள், திட்டத்தில் பங்கேற்கும் தனியார் மருந்தகங்களிலும் பல் மருந்தகங்களிலும் தங்கள் மருத்துவ மற்றும் பல் சிகிச்சைகளுக்கு கட்டணக் கழிவுகளைப் பெறுவர்.