போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரனை நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஏற்க மக்கள் செயல் கட்சி, பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறுத்துவிட்டனர். அவ்வாறு செய்வதற்கு அடிப்படை ஆதாரம் இல்லை என அவர்கள் கூறினர்.
திரு ஈஸ்வரன் மீதான விசாரணையின் முடிவு இன்னும் தெரியாததே இதற்குக் காரணம் என்று அவைத் தலைவர் இந்திராணி ராஜா குறிப்பிட்டார்.
திரு ஈஸ்வரன் மீது நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க காலம் கனியவில்லை என்று சொன்ன அவர், அவ்வாறு செய்தால் இந்த விவகாரத்தில் முடிவை முன்கூட்டியே தீர்மானிப்பதாகிவிடும் என்றார்.
மீதமுள்ள நாடாளுமன்றத் தவணைக் காலத்தில் திரு ஈஸ்வரனை எம்.பி. பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்குவதா என்பது குறித்து செவ்வாய்க்கிழமை நடந்த விவாதத்தின்போது குமாரி இந்திராணி மேற்கண்ட கருத்துகளைக் கூறினார்.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஸல் புவா அந்தத் தீர்மானத்தை முன்வைத்தார்.
குமாரி இந்திராணி தாக்கல் செய்த வேறொரு தீர்மானத்தில், தவறிழைத்ததாக சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்படும் எந்தவொரு எம்.பி.யிடமும் உறுதியாகவும் நியாயமாகவும் நடந்துகொள்ளும்படி உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார். திரு ஈஸ்வரன் மீதான விசாரணையில் முடிவு வெளிவந்த பின்னரே அவரது எம்.பி. பதவி குறித்து பரிசீலிக்கும்படியும் குமாரி இந்திராணி கேட்டுக்கொண்டார்.
திருவாட்டி புவா, குமாரி இந்திராணி முன்வைத்த தீர்மானங்கள் குறித்து ஏறத்தாழ இரண்டு மணி நேரம் நீடித்த விவாதத்திற்குப் பிறகு, குமாரி இந்திராணி தாக்கல் செய்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
எம்.பி. ஒருவரைத் தற்காலிகமாக நீக்குவதற்கான அதிகாரம் கொண்டுள்ள நாடாளுமன்றம், பொதுவாக பொருந்தக்கூடிய கோட்பாடுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் தனிப்பட்ட முறையில் அல்ல என்றும் குமாரி இந்திராணி விவரித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“எம்.பி.யை தற்காலிகமாக பதவிநீக்கம் செய்வது கடுமையான விவகாரமாகும். அவ்வாறு செய்தால், சட்டத்துக்கு உட்பட்டு சரியான கோட்பாடுகளுடன் அதைச் செய்யவேண்டும்,” என்றார் அவர்.
வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி உறுப்பினரான திரு ஈஸ்வரன், லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவால் ஜூலை 11ஆம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
விசாரணை முடியும்வரை விடுப்பில் வைக்கப்பட்டுள்ள அவருக்கு, மாதச் சம்பளம் $8,500ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், எம்.பி.க்கு உண்டான படித்தொகை அவருக்குத் தொடர்ந்து வழங்கப்படுகிறது.