தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஸ்போர்ட்ஸ் ஹப் நூலகம் நவம்பர் 12ல் மூடல்

2 mins read
d0e12987-1b7b-474b-a33b-279f4910a4e6
இரவலாக புத்தங்கங்களை வாங்கிச் சென்று இருப்போர் அவற்றை உரிய நேரத்தில் திருப்பி ஒப்படைத்துவிடும்படி வாசகர்களை ஸ்போர்ட்ஸ் ஹப் நூலகம் கேட்டுக்கொண்டு உள்ளது.  - படம்: பெரித்தா ஹரியான் கோப்புப்படம்

காலாங்கில் உள்ள ஸ்போர்ட்ஸ் ஹப் நூலகம் நவம்பர் 12ஆம் தேதி மூடப்படும்.

அங்குள்ள புத்தகங்களில் ஒரு பகுதி, தேசிய நூலகத்திற்கும் தெம்பனிஸ் வட்டார நுலகத்திற்கும் கொண்டு செல்லப்படும்.

விளையாட்டு, பொழுதுபோக்கு, பயிற்சி, பயிற்சிப் பயிற்றுவிப்பு போன்ற துறைகள் தொடர்பான புத்தகங்களும் கற்றல் சாதனங்களும் தெம்பனிஸ் வட்டார நூலகத்தில் 2024 மார்ச் முதல் கிடைக்கும்.

அடுத்த ஆண்டு அக்டோபர் வாக்கில் 20,000 புத்தகங்களை வாசகர்கள் இரவல் வாங்கிச் செல்லலாம் என்று ஸ்போர்ட்ஸ் ஹப் தெரிவித்துள்ளது.

அவற்றோடு, தேசிய நூலகத்தில் 2024ஆம் ஆண்டுவாக்கில் 15,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள், மின்னணு சாதனங்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, இரவலாக புத்தங்கங்களை வாங்கிச் சென்று இருப்போர் அவற்றை உரிய நேரத்தில் திருப்பி ஒப்படைத்துவிடும்படி வாசகர்களை நூலகம் கேட்டுக்கொண்டு உள்ளது.

அவை ஸ்போர்ட்ஸ் ஹப் நிறுவனத்திற்குச் சொந்தம் என்பதால் அவற்றைத் தேசிய நூலக வாரியத்தின் இதர நூலகங்களில் திருப்பித் தர இயலாது என்பதை அது சுட்டியது.

புத்தகங்களை அக்டோபர் 23க்குப் பிறகு இரவல் வாங்கிச் செல்ல இயலாது என்று ஸ்போர்ட்ஸ் ஹப் இணையத்தளம் தெரிவிக்கிறது.

அதேபோன்று மின் புத்தகம், மின் சஞ்சிகை போன்ற மின் படைப்புகளை இரவல் வாங்குவது அக்டோபர் 30ஆம் தேதியுடன் முடிந்துவிடும். புத்தகங்கள், மின் வெளியீடுகள் அனைத்தையும் நூலகத்திடம் திருப்பி ஒப்படைக்க கடைசி நாள் நவம்பர் 11ஆம் தேதியாகும்.

அக்டோபர் மாதத்தில் நடக்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்த நூலகச் செயல்திட்டங்கள், நடவடிக்கைகள் திட்டமிட்டபடி இடம்பெறும் என்றும் இணையத்தளம் தெரிவிக்கிறது.

ஸ்போர்ட்ஸ் ஹப் நூலகம் விளையாட்டை மையமாகக் கொண்டு 2014ல் தோற்றுவிக்கப்பட்டது.

அந்த இடம், சமூக நடவடிக்கைகளுக்கும் முக்கியமான விளையாட்டு நிகழ்ச்சிகள் வாழ்க்கை பாணி நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்தப்படும் என்று ஸ்போர்ட்ஸ் ஹப் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

அந்த இடத்திற்கான புத்துயிர் திட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அது கூறியது.

குறிப்புச் சொற்கள்