800க்கும் மேற்பட்ட மோசடிகள்: $17.1 மில்லியன் இழப்பு நேர்வதை அதிகாரிகள் தடுத்தனர்

800க்கும் மேற்பட்ட மோசடிகள்: $17.1 மில்லியன் இழப்பு நேர்வதை அதிகாரிகள் தடுத்தனர்

2 mins read
d4889de1-fac8-4f6b-8cdd-14d5d7b6d053
ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கும் செப்டம்பர் 15ஆம் தேதிக்கும் இடையே காவல்துறையும் வங்கிகளும் மோசடிக்கு ஆளான 4,000க்கும் அதிகமான வங்கி வாடிக்கையாளர்களுக்கு 5,000க்கும் மேற்பட்ட குறுந்தகவல்களை அனுப்பியுள்ளன. - படம்: சிங்கப்பூர் காவல் துறை
Google News Preferred Icon

காவல் அதிகாரிகளும் வங்கிகளும் தற்போது நடந்துவரும் 800க்கும் மேற்பட்ட மோசடிகளைத் தடுத்து $17.1 மில்லியனுக்கும் அதிகமான தொகை இழப்பு நேர்வதைத் தடுத்துள்ளதாக காவல்துறை அதன் அறிக்கையில் புதன்கிழமையன்று தெரிவித்தது.

ஒரு மாதகாலமாக நடந்த அமலாக்க நடவடிக்கைக்காகக் காவல்துறைக்குக் கீழ் இயங்கிவரும் மோசடிக்கு எதிரான பிரிவினர், ‘டிபிஎஸ்’, ‘யுஓபி’, ‘ஓசிபிசி’, ‘எச்எஸ்பிசி’, ‘ஜிஎக்ஸ்எஸ்’, ‘ஸ்டாண்டர்ட் சார்டட் ஆகிய ஆறு வங்கிகளுடன் இணைந்து செயல்பட்டனர்.

எந்திரச் செயல்முறை தானியக்க முறைவழி வேலை, முதலீடு உள்ளிட்ட வெவ்வேறு மோசடிகளுக்கு ஆளாகியுள்ளோரை அடையாளம் கண்டு இழப்பு நேர்வதைத் தவிர்த்திட, அவர்களுக்குக் குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்பட்டது.

இந்த எந்திரச் செயல்முறை தானியக்க முறை, காவல் அதிகாரிகள் தகவல் பகிர்வைத் தானியக்கமயமாக்க வகைசெய்ய உதவியது. அத்துடன் குறுந்தகவல் மூலம் விவரம் தெரிவிப்பை பெரிதளவில் செய்ததும் கைகொடுத்ததாக காவல்துறை குறிப்பிட்டது.

மோசடிக்கு ஆளாகியுள்ள 4,000க்கும் மேற்பட்ட வங்கி வாடிக்கையாளர்களுக்குக் காவல்துறையினரும் வங்கிகளும் 5,000க்கும் அதிகமான குறுந்தகவல்களை ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கும் இம்மாதம் 15ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, 600க்கும் மேற்பட்ட ‘பேநவ்’ எண்களும் தவறிழைத்தோர் பட்டியலில் சேர்க்கப்பட்டன. இதனால் $70,000 இழப்பு நேர்வதைத் தவிர்க்க முடிந்தது. தவறான நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் ‘பேநவ்’ எண்கள் குறித்து காவல்துறை அந்தந்த வங்கிகளுடன் தகவல் பகிர்ந்ததன் மூலம் வங்கிகளும் குறித்த நேரத்தில் நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்பட்டது.

“பேநவ் தவறாகப் பயன்படுத்தப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிர்ச்சிதரும் வேகத்தில் அதிகரித்துவரும் பிரச்சினையை இந்தக் கூட்டு முயற்சி நேரடியான, முன்னெச்சரிக்கையுடன் கூடிய முறையில் கையாள உதவியது” என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

மோசடிக்கு ஆளானோரைக் காவல்துறையினர் எளிதில் சென்றடைவதற்கான வழியை வங்கிகளுடனான பங்காளித்துவம் மேம்படுத்தியுள்ளது. இதனால் அதிகமானோருக்குத் தகவல் தெரிவித்துக் கூடுதல் இழப்பைத் தவிர்க்க முடிந்ததாக அறியப்படுகிறது.

காவல்துறையினர் அனுப்பிய குறுந்தகவல் எச்சரிக்கையைப் படித்த பின்னரே மோசடிக்குத் தாங்கள் ஆளாகியுள்ளதைப் பலரும் உணர்ந்தனர். உடனே பணம் அனுப்புவதை நிறுத்திடுமாறு இந்தக் குறுந்தகவல்களில் குறிப்பிட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், ‘ஸ்கேம்ஷீல்டு’ கைப்பேசி செயலியையும் வங்கிகள், சமூக ஊடகங்கள், சிங்பாஸ் கணக்குகள் ஆகிய தனிப்பட்ட கணக்குகளுக்கு ஈரடுக்கு பாதுகாப்பு அம்சத்தையும் பயன்படுத்துமாறு காவல்துறை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மோசடி தொடர்பில் காவல்துறையினர் செப்டம்பர் 13ஆம் தேதியன்று வெளியிட்ட ஆண்டிடைப் புள்ளிவிவரங்களின்படி ஜனவரிக்கும் ஜூனுக்கும் இடைப்பட்ட காலத்தில் 22,339 மோசடி சம்பவங்கள் பதிவாகின. 2022ஆம் ஆண்டின் இதே ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இது 64.5% அதிகரிப்பாகும்.

குறிப்புச் சொற்கள்