மீன் சூப் விற்கும் உணவுக்கடைக்காரர் ஒருவர் அதே உணவுவகையை விற்று வந்த மற்றொரு கடைக்காரரை மரத்தால் செய்யப்பட்ட கம்பால் அடித்ததில் பாதிக்கப்பட்ட ஆடவரின் மண்டை ஓட்டிலும் வலது மணிக்கட்டிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.
51 வயது திரு புன்னாட்டாரோ வீயின் மூளையில் ரத்தக் கசிவும் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவருக்கு 75 நாள்களுக்கு மருத்துவமனை விடுப்பு வழங்கப்பட்டது.
திரு வீக்குக் கடுமையான காயங்களை விளைவித்ததை 70 வயது பெக் சுவான் ஆன் ஒப்புக்கொண்டார்.
சம்பவம் நிகழ்ந்தபோது காமன்வெல்த் டிரைவ் வட்டாரத்தில் உள்ள டங்ளின் ஹால்ட் உணவு நிலையத்தில் மீன் சூப் கடை வைத்திருந்தார்.
அதே உணவு நிலையத்தில் திரு வீயும் மீன் சூப் விற்றார்.
தீரு வீ தமக்குப் போட்டியாக இருப்பதாக பெக் கருதியதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்துக்கு முன்பு இருவருக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அதைத் தொடர்ந்து, தீரு வீ தமது கடையைத் திறந்துகொண்டிருந்தபோது அவருக்குப் பின்புறத்திலிருந்து வந்த பெக், அவரது தலையை 70 செண்டி மீட்டர் நீளமுள்ள மரக் கம்பால் தொடர்ந்து பலமுறை அடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தக் கம்பில் ஆணி ஒன்று நீண்டுகொண்டிருந்ததாக அறியப்படுகிறது.
திரு வீயின் மனைவி அங்கிருந்ததாகவும் பெக்கைத் தடுக்க அவர் முயன்றதாகவும் அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார். அவரையும் அந்த மரக்கம்பால் பெக் அடிக்க முயன்றதாவும் ஆனால் மரக் கம்பை திரு வீயின் மனைவி தமது கைகளால் பற்றிக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
திரு வீ தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமது மகளின் அறிவுரையைக் கேட்டு பெக் பிறகு காவல்துறையிடம் சரணடைந்தார்.
பெக்கிற்கு ஒன்பது மாதங்களிலிருந்து ஓராண்டு வரை சிறைத் தண்டனை விதிக்குமாறு அவரது வழக்கறிஞர் சப்ரிந்தர் சிங் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.
தமது கட்சிக்காரர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தற்போது அவர் தமது உணவுக்கடையை நடத்தவில்லை என்றும் திரு சிங் கூறினார்.
திரு வீ தூண்டியதால் பெக் அவரைத் தாக்கியதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் அடுத்த மாதம் 5ஆம் தேதியன்று தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

