தொழில்நுட்பம், மேம்பட்ட கற்றல் மின்தளங்களில் கல்வி அமைச்சு கவனம்

வேகமாக மாறிவரும் உலகுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்துதல்

2 mins read
4b75a2f2-05ac-4148-9d93-32999d02db8d
கல்வி அமைச்சுப் பள்ளிகள் வேலைத்திட்டக் கருத்தரங்கு 2023ல் கற்றல் சூழல்களைப் புதுப்பிப்பது தொடர்பில் அமைச்சு பள்ளிகளுக்குக் கூடுதல் நிதி அளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வேகமாக மாறிவரும் உலகில் மாணவர்கள் வெற்றிபெற, தொழில்நுட்பத்தின் மூலம் கல்வியை உருமாற்றுதல், மாணவர்களின் கற்றல் அனுபவங்களைச் செறிவூட்டும் வகையில் பள்ளிச் சூழல்களைப் புதுப்பித்தல், 21ஆம் நூற்றாண்டுத் திறன்களை மேம்படுத்துதல் போன்ற திட்டங்களைக் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் புதன்கிழமையன்று அறிவித்தார்.

கல்வி அமைச்சுப் பள்ளிகள் வேலைத்திட்டக் கருத்தரங்கு சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடைபெற்றது. அதில் அவர் பேசினார்.

இவ்வாண்டு கருத்தரங்கின் கருப்பொருள் ‘கற்றலின் எதிர்காலத்தைச் செதுக்குதல்’. கல்வித்துறையின் முன்னுரிமைகள் பற்றியும் புத்தாக்கம் புகுத்துதல் குறித்தும் பேச, இந்த வருடாந்திரக் கருத்தரங்கில் 1,600க்கும் அதிகமான பள்ளித் தலைவர்களும் கல்வியாளர்களும் கூடினர்.

சிதறிவரும் உலகக் கட்டொழுங்கு, பொருளியல் இடையூறுகள், அதிவேகத் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், அதிலும் குறிப்பாக செயற்கை நுண்ணறிவுத் துறை தொடர்பான முக்கியச் சவால்களை, இவ்வாண்டின் கருத்தரங்கு ஆராய்ந்தது.

“மேலும் அதிகளவில் நிச்சயமற்ற தன்மையை நமது மாணவர்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். கடந்த 20, 30 ஆண்டுகளாக நாம் அனுபவித்துள்ள நிலைத்தன்மையையும் அமைதியையும் அவர்களால் அனுபவிக்க முடியாமல் போகலாம்,” என்றார் திரு சான்.

ஜிங் ஷான் தொடக்கப்பள்ளி அறிவியல் பாடத் தலைவரும் சுற்றுச்சூழல் அறிவியல் மன்றத்தின் பொறுப்பாசிரியருமான திருவாட்டி பெகி சியோங் தொடக்கநிலை மாணவி யுபாஷனா ஸ்ரீ சிவஷண்முகத்திற்கு உதவுகிறார். பாட அனுபவங்கள், பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கற்றல் தளங்கள் ஆகியவற்றின் மூலம் நிலைத்தன்மை கலாசாரத்தை ஜிங் ஷான் தொடக்கப்பள்ளி உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
ஜிங் ஷான் தொடக்கப்பள்ளி அறிவியல் பாடத் தலைவரும் சுற்றுச்சூழல் அறிவியல் மன்றத்தின் பொறுப்பாசிரியருமான திருவாட்டி பெகி சியோங் தொடக்கநிலை மாணவி யுபாஷனா ஸ்ரீ சிவஷண்முகத்திற்கு உதவுகிறார். பாட அனுபவங்கள், பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கற்றல் தளங்கள் ஆகியவற்றின் மூலம் நிலைத்தன்மை கலாசாரத்தை ஜிங் ஷான் தொடக்கப்பள்ளி உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கல்வி அமைச்சின் ‘தொழில்நுட்பம் வழி கல்வித்துறை உருமாற்றம்’ (எட்டெக்) பெருந்திட்டம் 2030, அடுத்த ஆண்டு முதல் பள்ளிகளில் படிப்படியாக அமல்படுத்தப்படவுள்ளது.

இப்பெருந்திட்டத்தின் மூலம் பள்ளிகள் தற்போதுள்ள வளங்களைக் கொண்டு மாணவர்களின் வேறுபடும் கற்றல் தேவைகளுக்காக மேலும் அதிகம் செய்யலாம். அதேவேளை மாற்றத்தின் வேகத்தைச் சமாளிக்க ஆசிரியர்களுக்கும் உதவி கிட்டும்.

இதன்படி, மாணவர்களின் மின்னிலக்கத் திறன் மேம்பாட்டைக் கல்வி அமைச்சு வலுவாக்கும். இதில் தகவல்களின் துல்லியம், நம்பகத்தன்மை, ஏற்புடைமை ஆகியவற்றை மாணவர்கள் மேலும் நன்கு அறிய மின்னிலக்கத் தகவல் நிர்வாகத் திறன்களை அவர்கள் பெறுவர்.

குறிப்புச் சொற்கள்