$70,000க்குமேல் லஞ்சம் வழங்கிய நிறுவன முன்னாள் இயக்குநருக்குச் சிறை

$70,000க்குமேல் லஞ்சம் வழங்கிய நிறுவன முன்னாள் இயக்குநருக்குச் சிறை

1 mins read
2956a5d2-e7bf-4943-91f1-4c43f8c974e5
லோங்கிற்கு புதன்கிழமை 13 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. - கோப்புப் படம்

சந்தைப்படுத்துதல் சேவை நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜெஃப்ரி லோங் சீ கின், 45, சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக (எஸ்எம்யு) பயிற்சிக் கழக வர்த்தக மேம்பாட்டுப் பிரிவு இணை இயக்குநர் ஒருவரிடம் மொத்தம் $71,300 லஞ்சம் வழங்கினார்.

‘அசெட்சுவலைஸ்’ நிறுவனத்தில் அப்போது பணியாற்றிய லோங், 2019 பிப்ரவரி முதல் நவம்பர் வரை கிறிஸ்டஃபர் டான் தோ கீயிடம் லஞ்சம் வழங்கினார்.

எஸ்எம்யு பயிற்சிக் கழகத்துடன் அசெட்சுவலைஸ் நிறுவனம் வர்த்தக ரீதியாக பலனடையவே லோங் இவ்வாறு செய்தார். குற்றம் புரிந்த காலகட்டத்தில் லோங் குறைந்தது $140,600 சம்பாதித்தார்.

லோங்கிற்கு புதன்கிழமை 13 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. $44,000க்குமேல் தொகையுடன் சம்பந்தப்பட்ட மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளை அவர் ஆகஸ்ட்டில் ஒப்புக்கொண்டார்.

கணக்கியல், நிறுவன ஒழுங்குமுறை ஆணையத்தின் பதிவேட்டின்படி, அசெட்சுவலைஸ் நிறுவனத்தில் லோங் தற்போது இயக்குநராக இல்லை.

டான், 45 எஸ்எம்யுவில் இப்போது பணியாற்றவில்லை. அவர் மீதான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

தேசிய சேவையின்போது இருவரும் முதன்முதலாக சந்தித்தனர். ஒரே போர்க்காலப் படைவீரர் பிரிவில் இருவரும் சேர்க்கப்பட்டனர். ஆனால், அதுகுறித்த விவரம் நீதிமன்ற ஆவணங்களில் இடம்பெறவில்லை.

குறிப்புச் சொற்கள்