தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘பசுமைக் கப்பல் வழித்தடம் நீண்டகாலவளர்ச்சிக்கும் ஆதரவளிக்க வேண்டும்’

2 mins read
5d1bca11-09c4-4363-862e-ff74395faa81
நியூயார்க்கில் எர்த்ஷாட் புத்தாக்கப் பரிசு உச்சநிலை மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் உரையாற்றினார். - படம்: வெளியுறவு அமைச்சு

‘கரிமக் கழிவற்ற பசுமைக் கப்பல் வழித்தடம், நீண்டகால பொருளியல் வளர்ச்சிக்கும் ஆதரவளிக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் எர்த்ஷாட் புத்தாக்கப் பரிசு உச்சநிலை மாநாட்டில் ‘நமது பெருங்கடலுக்குப் புத்துயிர்’ என்ற கருப்பொருளில் உரையாற்றிய டாக்டர் பாலகிருஷ்ணன், கடல்துறையில் கரிமக் கழிவைக் குறைப்பதும் அந்தத் துறையை மின்னிலக்கமயமாக்குவதும் பெருங்கடல் பழைமைப் பாதுகாப்பு முயற்சிகளில் உயிர்நாடியானவை என்று குறிப்பிட்டார்.

உலக வர்த்தகத்தில் சுமார் 90 விழுக்காடு கப்பல்கள் மூலம் நடக்கிறது. உலகின் வளிமண்டலத்தில் கலக்கும் கரியமில வாயுவில் கிட்டத்தட்ட 3 விழுக்காடு கப்பல்கள் மூலம் வெளியாகிறது என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் துறைமுகம், லாங் பீச் துறைமுகம் ஆகியவற்றுடன் கடந்த ஏப்ரல் மாதம் சிங்கப்பூர் கடல்துறை துறைமுக ஆணையம் உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டது.

சிங்கப்பூருக்கும் அமெரிக்காவின் அந்த இரண்டு பெரிய துறைமுகங்கள் அமைந்து இருக்கும் சான் பெட்ரோ வளைகுடாவிற்கும் இடையில் கரிமக் கழிவில்லாத, மின்னிலக்கமய கப்பல் போக்குவரத்து வழித்தடத்தை தோற்றுவிப்பது அந்த உடன்பாட்டின் நோக்கம். அந்த வழியாகச் சென்று வரும் கப்பல்கள் கரிமக் கழிவை அறவே வெளியிடாதவையாக இருக்கும்.

இருந்தாலும், அந்த வழித்தடம் கரிமக்கழிவு அற்றதாகவும் அதேவேளையில், பொருளியல் நோக்கில் தாக்குப்பிடித்து நிற்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதே சவால் என்று டாக்டர் விவியன் குறிப்பிட்டார்.

கரிமக் கழிவற்ற மின்னிலக்கக் கப்பல் வழித்தடங்கள் உயிர்நாடியானவை என்பதை சுட்டிய அவர், அவை அதே நேரத்தில் பொருளியல் ரீதியாக நீண்டகாலப்போக்கில் தாக்குப்பிடித்து நிற்பவையாகவும் இருக்க வேண்டும் என்றார்.

பெருங்கடல் பழைமைப் பாதுகாப்பிற்கு சிங்கப்பூர் தன்னால் முடிந்ததைச் செய்து வருகிறது என்று குறிப்பிட்ட அமைச்சர், கடல் வர்த்தகம்வழி தொடர்ந்து பொருளியல் பலன் அடைய சிங்கப்பூருக்கு அத்தகைய முயற்சிகள் முக்கியமானவை என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்