தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமைச்சர்: சிங்கப்பூர் அடையாளம் அந்நிய நெருக்குதலை தடுக்கும் அரண்

2 mins read
98ae135b-bb15-4682-950e-d4bf7c41603d
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், சிஎன்என் பிரமுகர் கிறிஸ்டைன் அமன்போருக்கு நியூயார்க்கில் பேட்டி அளித்தார். - படம்: வெளியுறவு அமைச்சு

சிங்கப்பூர், தனது சமூகத்திற்குள் செல்வாக்கு செலுத்த இடம்பெறக்கூடிய அந்நியச் செயல்களுக்கு எதிராக பொருத்தமான முன்னெச்சரிக்கைகளை எடுத்துவருகிறது.

சிங்கப்பூரின் வலுவான தனி அடையாளம், அத்தகைய அந்நிய நெருக்குதல்களைத் தடுக்கும் அரணாகத் திகழும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் புதன்கிழமை தெரிவித்தார்.

சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியாவில் வசிக்கும் சீன மக்களிடம் செல்வாக்கு செலுத்த சீனா முயல்வதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதை எந்த அளவுக்கு முக்கியமான ஒன்றாக சிங்கப்பூர் அரசாங்கம் பார்க்கிறது என்று சிஎன்என் அனைத்துலக பிரமுகர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்தார்.

அது, நாம் தெரிந்துகொண்டிருக்க வேண்டிய, பொருத்தமான முன்னெச்சரிக்கைகளை எடுக்க வேண்டிய ஒரு விவகாரம் என்று டாக்டர் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

இருந்தாலும் சிங்கப்பூரர்களை நான் நம்புகிறேன் என்பதே இதில் அடிப்படையான அம்சம் என்றார் அவர்.

“எங்கள் அடையாளம், தனித்தன்மை எங்களுக்குத் தெரியும். எங்களின் நீண்டகால நலன்கள் என்ன என்பது எங்களுக்குத் தெரியும்,” என்று அமைச்சர் தெரிவித்தார்.

“அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் இரண்டுக்கும் நேரடியான வழியில் சிங்கப்பூர் செயல்படுகிறது. அதேவேளையில் தன் நலன்களை அது விட்டுக்கொடுப்பதில்லை.

“எங்களுக்குச் சொந்த, நீண்டகால தேசிய நலன்கள் இருக்கின்றன என்பதை நாங்கள் அவற்றிடம் எடுத்துச் சொல்கிறோம்.

“அமெரிக்கா, சீனா இரண்டுமே எங்களின் நீண்டகால தேசிய நலன்களுக்கு முக்கியமானவை,” என்று அமைச்சர் டாக்டர் விவியன் தெரிவித்தார்.

சிங்கப்பூர் தனித்தன்மை அடையாளம் என்பது இன அல்லது மொழி அடையாளத்திற்கு எல்லாம் அப்பாற்பட்டது என்பதை டாக்டர் பால கிருஷ்ணன் சுட்டினார்.

“சிங்கப்பூர் இளமையான, பல இன, பல மொழி நகர நாடு. நாங்கள் சீனரோ இந்தியரோ மலாய்க்காரரோ அல்ல. நிச்சயமாக அமெரிக்கரும் அல்ல,” என்றார் அமைச்சர்.

“சிங்கப்பூர் அடையாளம் என்ற வலுவான உணர்வு இருக்கிறது. நாங்கள் வேறு வேறு மொழியைப் பேசலாம். தோற்றம் வேறு வேறு நிறத்தில் இருக்கலாம். ஆனால் சிங்கப்பூருக்கு நீங்கள் வந்தால் வலுவான சிங்கப்பூர் அடையாளத்தை கண்டுகொள்ளலாம்,” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவும் சீனாவும் ஆசிய பசிபிக்கில் ஆதிக்கம் செலுத்த முயலும் நிலையில் சிங்கப்பூர் அதன் தொடர்பில் எப்படி செயல்படுகிறது என்பது பற்றி கேட்டபோது, சிங்கப்பூர் அந்த இரண்டு நாடுகளோடும் பின்னிப் பிணைந்து இருப்பதாக அமைச்சர் கூறினார்.

அமெரிக்கா, சீனாவுடன் மாபெரும் உறவை சிங்கப்பூர் கொண்டுள்ளது. அவை வெறும் சொற்கள் அல்ல. சிங்கப்பூரில் ஆக அதிகம் முதலீடு செய்துள்ள நாடு அமெரிக்கா. சிங்கப்பூரில் சேவை வர்த்தகப் பங்காளியாகவும் அது திகழ்கிறது.

பொருள்களுக்கான சிங்கப்பூரின் ஆகப்பெரிய வர்த்தக பங்காளியாக சீனா திகழ்கிறது. சீனாவில் சிங்கப்பூர் கணிசமாக முதலீடு செய்துள்ளது. அதேபோல் அமெரிக்காவிலும் சிங்கப்பூர் முதலீடு செய்துள்ளது.

அமெரிக்காவும் சீனாவும் சேர்ந்து நடைபோட்டால் அதுதான் சிங்கப்பூரைப் பொறுத்தவரை தலைசிறந்த உலகமாக இருக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்