அங் மோ கியோவில் உள்ள தொழிற்சாலைக் கட்டடம் ஒன்றில் உள்ள ஆய்வகம், வாரத்திற்கு ஏழு மில்லியன் கொசுக்களை இனப்பெருக்கம் செய்கிறது. இதுவரை அது 300 மில்லியனுக்கும் அதிகமான கொசுக்களை இனப்பெருக்கம் செய்துள்ளது.
‘வோல்பாக்கியா’ திட்டத்தின் தலைமையகமாகத் திகழும் அந்த இடத்தில்தான் மனிதர்களைக் கடிக்காத ஆண் ‘ஏடிஸ் எகிப்தி’ கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யப்பட்டு தேர்வுசெய்யப்பட்ட இடங்களில் வெளியிடப்படுகின்றன. பின்னர் பெண் கொசுக்களுடன் அவை இனச்சேர்க்கையில் ஈடுபடும்.
ஆண் கொசுக்கள் ‘வோல்பாக்கியா’ பாக்டிரியாவைக் கொண்டிருப்பதால், அவற்றுடன் இனச்சேர்க்கையில் ஈடுபடும் பெண் கொசுக்கள், பின்னர் இடும் முட்டைகள் மூலம் குஞ்சு பொரிக்கப்பட மாட்டா. இது, கொசு இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
எனினும், 2016ல் ‘வோல்பாக்கியா’ திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து சிங்கப்பூரில் டெங்கி பாதுகாப்பு குறைந்ததாகத் தெரியவில்லை. கடந்த ஆண்டு மொத்த 32,173 டெங்கிச் சம்பவங்கள் பதிவாகின.
சிங்கப்பூரில் டெங்கி பாதிப்பு மீண்டும் அதிகரிக்கும் அபாயம் நிலவுவதாக தேசிய சுற்றுப்புற வாரியம் இந்த மாதத் தொடக்கத்தில் எச்சரித்திருந்தது. வார அடிப்படையில் டெங்கி பாதிப்பு எண்ணிக்கை சில நூற்றை எட்டிவிட்டன. ஐம்பதுக்கும் அதிகமான டெங்கிக் குழுமங்கள் உருவெடுத்துள்ளன.
டெங்கி பரவலைக் கட்டுப்படுத்த ‘வோல்பாக்கியா’ திட்டம் மட்டுமே எளிய தீர்வாகிவிடாது என வாரியத்தின் சுற்றுப்புற சுகாதாரக் கழகத்தின் இயக்குநரான டாக்டர் இங் லீ சிங் கூறினார்.
‘வோல்பாக்கியா’ திட்டம் செயல்படும் தெம்பனிஸ், ஈசூன், சுவா சூ காங் போன்ற பகுதிகளில் ஏடிஸ் எகிப்தி கொசு எண்ணிக்கை 98 விழுக்காடு வரையும் டெங்கி பாதிப்பு 88 விழுக்காடு வரையும் குறைந்திருப்பதாக மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங் மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
டெங்கி பரவல் அபாயத்தைக் குறைப்பதில் ‘வோல்பாக்கியா’ தொழில்நுட்பம் ஆக்ககரமாக இருந்தாலும், டெங்கி பரவலைக் கட்டுப்படுத்தும் மற்ற முயற்சிகளும் அதற்குத் துணைநிற்க வேண்டும் என்றார் டாக்டர் இங்.

