‘போதைப் பொருள் கடத்தலை முறியடிக்க மரண தண்டனை அவசியமாகிறது’

‘போதைப் பொருள் கடத்தலை முறியடிக்க மரண தண்டனை அவசியமாகிறது’

3 mins read
e876015b-12d6-4474-9ee6-8db5963b9cfb
மரண தண்டனை மற்றும் போதைப் பொருள் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் உரையாற்றினார். - படம்: பெரித்தா ஹரியான்

மரண தண்டனை என்பது எல்லா நாடுகளும் விரும்பி ஏற்பது அல்ல. அதே சமயத்தில், அத்தகைய தண்டனை இன்னும் கூடுதலான உயிர்களைக் காப்பாற்றிக்கூடியதாக இருந்தால் அதைப் ஏற்றுக்கொள்வதில் தவறில்லை என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்க வேண்டும் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு மரண தண்டனை விதிக்கப்படுவதால் இன்னும் அதிகமான உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இல்லை என்றால், அந்தத் தண்டனையை அது பயன்படுத்தக்கூடாது என்று திரு சண்முகம், ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற மரண தண்டனை மற்றும் போதைப் பொருள் எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் 80 இளையத் தலைவர்கள் முன்னிலையில் பேசினார்.

இக்கருத்தை முன் வைத்துப் பேசிய அமைச்சர், பின்னர் மரண தண்டனையின் அவசியத்தை வலியுறுத்தும் ஆதாரங்களைப் பட்டியலிட்டார்.

அதில் மற்ற நாடுகளும் மாநிலங்களும் போதைப் பொருள் புழக்கத்தைக் குற்றமற்ற செயலாக வகைப்படுத்தியுள்ளதை எடுத்துக்கூறினார். ஒப்புநோக்க சிங்கப்பூரில் நிலைமை வேறு.

அண்மையில் நடத்தப்பட்ட கருத்தாய்வில் சிங்கப்பூரர்களில் 66 விழுக்காட்டினர் போதைப் பொருள் கடத்தலை முறியடிக்க கட்டாய மரண தண்டனை அவசியம் என்று கருதுவது தெரிய வந்துள்ளது.

சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட இவ்வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் நாட்டவர்களிடம் உள்துறை அமைச்சு நடத்தின மற்றோர் ஆய்வில், 87 விழுக்காட்டினர் சிங்கப்பூருக்குள் பெரும் அளவிலான போதைப் பொருள் கடத்தி வரப்படுவது, விதிக்கப்படும் மரண தண்டனையால் குறைந்துள்ளது என்று கூறினர்.

“பொதுக் கொள்கை வகுப்பதில், உங்களுக்கு கருணையுடன் மென்மையான இதயம் இருக்க வேண்டும். அதேவேளை, கடினமான முடிவெடுக்கக்கூடிய இரும்புத் தலை வேண்டும். இவை அனைத்தையும் ஒன்றாக இணைப்பது எப்படி?” என்றார் அமைச்சர்.

சிங்கப்பூரில் தற்போது கடைப்பிடிக்கப்படும் போதைப் பொருள் தொடர்பான கொள்கைகளை பெரும்பாலான மக்கள் ஆதரிக்கின்றனர் என்று தாம் நம்புவதாகக் கூறிய திரு சண்முகம், அதற்கு மாறாக இந்தக் கொள்கை மாற்றப்பட வேண்டும் என்று சிங்கப்பூரர்கள் எண்ணினால், அதை மாற்றியாக வேண்டும், அவ்வாறு அரசாங்கம் செய்யவில்லை என்றால் அவர்கள் அரசாங்கத்தையே மாற்றி விடுவார்கள் என்றார்.

இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு உள்துறை அமைச்சும் தேசிய இளையர் மன்றமும் ஏற்பாடு செய்திருந்தன.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஒருவர், “ஏன் மரண தண்டனை கட்டாயமாக்கப்படுகிறது? அதை நீதிமன்றமே முடிவு செய்ய விட்டு விடலாமே,” என்று கேட்டதற்கு திரு சண்முகம், “நீதிபதிகளை எதுவும் செய்ய முடியாத ஓர் இக்கட்டான சூழ்நிலையில் தள்ள நான் விரும்பவில்லை,” என்றார்.

“இதன் தொடர்பில் முடிவெடுக்க தாங்களும் விரும்பவில்லை என்று நீதிபதிகளே எங்களிடம் தெரிவித்தார்கள். சட்டங்கள் தெளிவாக இருக்க வேண்டும். அவர்கள் அதை அப்படி நிறைவேற்ற விரும்புகிறார்கள். அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள எந்த நீதிபதியும் முன்வரவில்லை. எந்த அடிப்படையில் அவர்கள் ஒரு முடிவுக்கு வருவார்கள்?” என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

“போதைப் பொருள் சட்டங்கள் தெளிவற்றதாக இருந்தால் அவை பயனற்றதாகிவிடும். மரண தண்டனை என்பது கடுமையானதுதான். அது உங்களுக்கு அவசியம்தான் என்றால் அதில் உறுதியாக இருக்க வேண்டும். அது வேண்டுமா வேண்டாமா என்ற சந்தேகம் எழுந்தால் அதுவே மேலும் பல குற்றங்கள் தலைத்தூக்குவதற்குக் காரணமாகிவிடும்,” என்று திரு சண்முகம் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்