சிங்கப்பூர் வெள்ளி-வைப்புநிதிக் கணக்குகளுக்கு காப்புறுதி வரம்பு உயர்கிறது

சிங்கப்பூர் வெள்ளி-வைப்புநிதிக் கணக்குகளுக்கு காப்புறுதி வரம்பு உயர்கிறது

2 mins read
8d5bd7ec-4e08-4357-beea-11ed93a82a0c
சிங்கப்பூர் வெள்ளி-வைப்புநிதிக்கான காப்புறுதி வரம்பு 2024 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் $100,000க்கு உயர்த்தப்படும். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வங்கி வைப்புநிதிக்கான காப்புறுதி வரம்பு 2024 ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து $100,000க்கு உயர்த்தப்படும்.

தற்போது அது $75,000ஆக இருக்கிறது. சிங்கப்பூர் நாணய ஆணையம் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

வைப்புநிதிக் கணக்கு வைத்துள்ள 91 விழுக்காட்டினர், ஆணையத்தின் ‘டிஐ’ எனப்படும் வைப்புநிதி முதலீட்டுத் திட்டத்தின்கீழ் பலனடைவதை இது உறுதிசெய்யும்.

முழுமையான வங்கியிலோ நிதி நிறுவனத்திலோ சிங்கப்பூர் வெள்ளி-வைப்புநிதிக் கணக்குகளுக்கு இத்திட்டம் பாதுகாப்பு வழங்கும்.

வங்கிச் சட்டத்தின்கீழ் உரிமம் பெற்றவை முழுமையான வங்கிகள் எனப்படும். வைப்புநிதிக் கணக்குகளையும் கடன் வழங்கும் சேவையையும் அவை வழங்க இயலும்.

முன்னதாக, சிங்கப்பூர் வெள்ளி-வைப்புநிதிக்கான காப்புறுதி வரம்பு, ஏப்ரல் 2019ல் உயர்த்தப்பட்டது. அப்போது அது $50,000த்தில் இருந்து $75,000க்கு உயர்த்தப்பட்டது. அவ்வேளையில் வைப்புநிதிக் கணக்கு வைத்துள்ள 91 விழுக்காட்டினருக்கு காப்புறுதி கிடைக்க அது வகைசெய்தது.

ஆனால் அதன் பிறகு, வருவாயும் வைப்புநிதிக் கணக்குகளும் அதிகரித்ததை அடுத்து, முழுமையான காப்புறுதி பெறும் வைப்புநிதிக் கணக்கு உடையோரின் விகிதம் 89 விழுக்காடாகக் குறைந்தது.

எனவே, காப்புறுதி வரம்பை உயர்த்துவது குறித்து புதிய உத்திகளை வரவேற்கும் ஆலோசனை அறிக்கையை ஆணையம் கடந்த ஜூன் 27ஆம் தேதி வெளியிட்டது. ஆலோசனைகளைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஜூலை 31ஆம் தேதி நிறைவுபெற்றது.

‘ஆர்எச்பி’ குழுமம், மேபேங்க், ஜிஎக்ஸ்எஸ் வங்கி, பிஎன்பி பரிபாஸ், பிடி பேங்க் நெகாரா இந்தோனீசியா உள்ளிட்ட மொத்தம் 20 வங்கிகள் அவற்றின் பரிந்துரைகளை முன்வைத்தன.

பரிந்துரைத்தோரில் வெகு சிலரே, $100,000க்குமேல் காப்புறுதி வரம்பை உயர்த்தும்படி கூறியிருந்தனர்.

ஒவ்வொருமுறையும் மிகக் கவனமாகப் பரிசீலித்த பிறகே காப்புறுதி வரம்பு உயர்த்தப்படும் என்று ஆணையம் கூறியது. இதனால் வங்கிகளுக்குச் செலவு கூடும். அது வாடிக்கையாளர்களையும் பாதிக்கும் என்பதை ஆணையம் சுட்டியது.

வெளிநாட்டு நாணய-வைப்புநிதிகளுக்கு இந்தக் காப்புறுதி வரம்பு பொருந்தாது. சிறிய அளவிலான வைப்புநிதிக் கணக்கு வைத்திருப்போருக்கு உதவுவது நோக்கம் என்பதையும் இத்தகையோர் வெளிநாட்டு நாணய-வைப்புநிதிக் கணக்கு வைத்திருப்பது மிகக் குறைவு என்பதையும் ஆணையம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்