போலி கொவிட்-19 தடுப்பூசி: மருத்துவரின் தண்டனைக் காலம் 30 மாதமாக நீட்டிப்பு

போலி கொவிட்-19 தடுப்பூசி: மருத்துவரின் தண்டனைக் காலம் 30 மாதமாக நீட்டிப்பு

2 mins read
a72be63c-db0b-443f-9af1-9d42360a783c
படம்: - ஃபேஸ்புக்/  டாக்டர் ஜிப்சன் குவா

தனியார் மருத்துவரான டாக்டர் ஜிப்சன் குவா, ‘சலின்’ மருந்தை கொவிட்-19 தடுப்பு மருந்து எனக் கூறி தடுப்பூசி போட்டுள்ளார்.

அதற்காக அவருக்கு 18 மாதங்கள் மருத்துவராகப் பணியாற்ற இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது அது மேலும் 12 மாதங்கள் கூட்டப்பட்டு தண்டனைக் காலம் 30 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் டாக்டர் குவாவின் தண்டனை காலம் தொடங்கியது.

2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டாக்டர் குவாவின் நடவடிக்கையைக் கண்காணித்த சுகாதார அமைச்சு அவருக்கு எதிராக சிங்கப்பூர் மருத்துவ மன்றத்தில் புகார் கொடுத்தது.

புகாரின்பேரில் டாக்டர் குவாவை விசாரித்த மன்றம் டாக்டர் குவா அவரிடம் வரும் சில நோயாளிகளுக்கு , ‘சலின்’ மருந்தை கொவிட்-19 தடுப்பு மருந்து எனக் கூறி தடுப்பூசி போட்டதைக் கண்டுபிடித்தது.

டாக்டர் குவானின் 18 மாத தண்டனை காலம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது. சட்டப்படி மருத்துவருக்கு அதிகபட்ச இடைக்காலத் தடை 18 மாதம்தான். இருப்பினும், மருத்துவ மன்றம் அவரின் தண்டனைக் காலத்தை அதிகரிக்க உயர் நீதிமன்றத்தை அணுகியது.

உயர் நீதிமன்றமும் தண்டனைக் காலத்தை உயர்த்த ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து, தற்போது டாக்டர் குவாவின் தண்டனைக் காலம் 30 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் குவாமீது 17 மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் தற்போது 30,000 வெள்ளி பிணையில் வெளிவந்துள்ளார்.

குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால், அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்