குவீன்ஸ்டவுனில் உள்ள எங்கர்பாயிண்ட் கடைத்தொகுதியில் சிறிய நூலகச் சாவடி வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டுள்ளது.
‘காமிக்ஸ்’ நூலகம் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த நூலகச் சாவடியில் தமிழ், ஆங்கிலம், சீன, மலாய் மொழிகளில் கிட்டத்தட்ட 7,500 நூல்கள் உள்ளன.
பெரும்பாலானவை சிறுவர் விரும்பிப் படிக்கும் ‘காமிக்ஸ்’ எனும் கேலிச்சித்திர நூல்கள்.
தேசிய நூலக வாரியமும் எங்கர்பாயிண்ட் கடைத்தொகுதியும் இணைந்து இந்த புது முயற்சியை எடுத்துள்ளன.
எல்லா வயதினருக்கும் ஏற்ற வகையில் நூல்கள் உள்ளதாக நூலக வாரியம் தெரிவித்தது.
அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் புத்தக எண்ணிக்கையை 11,000ஆக உயர்த்தவும் நூலக வாரியம் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஓர் ஆண்டுக்கு நூலகச் சாவடி அங்கு செயல்படும்.
நூலகச் சாவடி கடைத்தொகுதியின் முதல் தளத்தில் உள்ளது. 1950, 1960களில் உள்ள ‘பாப்’ கலாசார முன்னெடுப்பைக் கருப்பொருளாகக்கொண்டு அவ்விடம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் சிட்டி ஸ்குவேர் கடைத்தொகுதியிலும் சிறிய நூலகச் சாவடி இருந்தது. அதன் பெயர் ‘மாங்கா’ நூலகம். அங்கு கிட்டத்தட்ட 5,000 நூல்கள் இருந்தன. அது இவ்வாண்டு பிப்ரவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை செயல்பட்டது.