சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் 2022ஆம் ஆண்டு பட்டதாரிகள் அதிக வேலை வாய்ப்புகளையும் இதுவரை இல்லாத அளவு அதிக தொடக்க ஊதியம் பெறுவதாக அண்மைய ஆய்வு தெரிவிக்கிறது.
மார்ச் 1 முதல் மே 14 வரை நடத்தப்பட்ட வருடாந்தர கூட்டுத் தன்னாட்சிப் பல்கலைக்கழகங்களின் பட்டதாரி வேலைவாய்ப்பு ஆய்வில் இந்தப் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தில் 2022ஆம் ஆண்டில் பட்டம் பெற்றவர்களில் 86.6 விழுக்காட்டினர் நிரந்தரப் பணியைப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
ஏறத்தாழ 40க்கும் மேற்பட்ட தொழில்துறைகளில் பணியமர்த்தப்பட்டுள்ள அவர்களுள் 40 விழுக்காட்டினர் இரண்டு முதல் ஆறு முழுநேர, நிரந்தரப் பணி வாய்ப்புகள் பெற்று, அதிலிருந்து தேர்ந்தெடுக்கின்றனர்.
அவர்களது சராசரி மாதச் சம்பளமும் $3,550இல் இருந்து 2022இல் $3,950ஆக உயர்ந்தது.
பட்டப்படிப்பை முடித்த ஆறு மாதங்களுக்குள் 91.6 விழுக்காட்டினர் வேலைவாய்ப்பைப் பெற்றதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.
சென்ற ஆண்டில், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றின் பட்டதாரிகள் $4,200 சம்பளம் பெறும் நிலையில், சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகப் பட்டதாரிகள் $4,800 சம்பளம் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தில் இயந்திரப் பொறியியல் துறையில் பயின்ற பிரதீப் ரவிச்சந்திரன் படிக்கும்பொழுதே ‘லைன்ஸ்பாட்’ எனும் தானியக்கத் துப்புரவுக் கருவிகளை உருவாக்கும் நிறுவனத்தில் பணிப் பயிற்சி மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார். தொடர்ந்து அங்கேயே முழுநேரப் பணியிலும் சேர்ந்திருக்கிறார்.
தற்பொழுது பொறியாளராக இருக்கும் இவர், முதலில் பட்டயக் கல்வி முடித்தபின் பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்காததாலும், பெரிய வாய்ப்புகளும் கிட்டாததாலும் தனது தகுதியை மேம்படுத்தவும், பணி தொடர்பான துறையில் மேற்கொண்டு பயிலவும் விரும்பி, இந்தப் படிப்பில் சேர்ந்ததாகச் சொல்கிறார்.
இந்தப் படிப்பு வெளிநாட்டுப் பல்கலைக்கழக பாடத்தொகுதிகளையும், எட்டு மாத கால பணியிடப் பயிற்சியும், பணி தொடர்பான செயல்திறன்களையும் வளர்க்கும் வகையில் அமைந்துள்ளதை கண்டு, இதனைத் தெரிவுசெய்ததாகக் குறிப்பிடுகிறார்.
படிக்கும்பொழுதே ‘ஸ்மார்ட் போக்குவரத்து அமைப்பை’ உருவாக்கும் போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் பரிசு பெற்றதோடு, வகுப்புப் பாடத்தின் ஒரு பகுதியாக குறைந்த வருமானமுடைய வீடுகளுக்கான ‘ஸ்மார்ட் நீர் அளவுமானி’ ஒன்றை வடிவமைத்து, சிங்கப்பூர் பொதுப் பயனீட்டுக் கழகத்தின் உதவியுடன் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் இணைத்தது பெரும் கற்றல் பயணமாக இருந்ததாகச் சொல்கிறார்.
தம்மோடு பயின்ற பலரும் பணியில் அமர்ந்தது மகிழ்ச்சி எனக் குறிப்பிடும் பிரதீப், அடுத்தடுத்து தன் திறமையை மேம்படுத்தி முன்னேறுவதே குறிக்கோள் என்கிறார்.