சிங்கப்பூரில் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் இருக்கும் இருக்கும் ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ் காத்தோங் ஹோட்டல் அறையில் திருவாட்டி தியாவின்னகே செவ்வந்தி மதுகா குமாரி, 32, என்ற பெண்ணை அவரின் கணவர் கொலை செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
கொலையுண்டதாகக் கூறப்படும் பெண்ணின் உடலை அவரின் நாடான இலங்கைக்குக் கொண்டு செல்ல ஏதுவாக அப்பெண்ணின் கல்லூரித் தோழி நிதி திரட்டுகிறார்.
இலங்கையைச் சேர்ந்த ஈஷான் தாரக கூட்டகே, 30, என்பவர், தன் மனைவியான அப்பெண்ணை செப்டம்பர் 9ஆம் தேதி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
கூட்டகே, மரின் பரேட் அக்கம்பக்க காவல்துறை நிலையத்திற்குச் சென்று அக்கொலையைத் தான் செய்ததாக ஒப்புக்கொண்டார்.
உடனடியாக அதிகாரிகள் கூட்டகே தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குச் சென்று பார்த்தபோது அங்கு திருவாட்டி தியாவின்னகே வெட்டுக்காயங்களுடன் அசைவின்றிக் கிடந்தார்.
அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள லா டுருப் பல்கலைக்கழகத்தில் வேதியியல் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்த அப்பெண், விடுமுறையில் சிங்கப்பூருக்கு வந்ததாக பல்கலைக்கழகப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
அப்பெண்ணின் கல்லூரித் தோழியான எலிசபெத் கேம்பர் என்பவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்காக நிதி திரட்டும் இயக்கத்தைத் (GoFundMe) தொடங்கி இருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் மாது, ஆஸ்திரேலியாவில் படித்துக்கொண்டிருந்த நிலையில் அவருடைய கணவர் இலங்கையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் என்று குமாரி கேம்பர் கூறினார்.
கொலையுண்ட பெண்ணின் உடலைச் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு அனுப்ப 8,000 ஆஸ்திரேலிய டாலர் (S$7,037) செலவாகும். ஆகையால், நிதியுதவி அளித்து உதவும்படி குமாரி கேம்பர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால், கூட்டகேக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

