சீமெயில் புதிய பிராம் சென்டர் கிளை; மனநலச் சேவையை வழங்கி உதவும்

சீமெயில் புதிய பிராம் சென்டர் கிளை; மனநலச் சேவையை வழங்கி உதவும்

2 mins read
cbc8a234-9b04-4e1e-b371-db06e544f9f8
பிராம் சென்டர் என்ற அமைப்பு மனநலப் பரிசோதனைகளை நடத்துகிறது. பயிற்றுவிப்பது, தோழமைத் திட்டம், மனோவியல் கல்வி, பெற்றோர் ஆதரவு, ஆலோசனை, கலை சிகிச்சை ஆகியவற்றின் வழியாக அது மனரீதியிலான ஆதரவையும் வழங்குகிறது. - படம்: பிராம் சென்டர்/ஃபேஸ்புக் 

மனநலம், நல்வாழ்வு அறப்பணி அமைப்பான பிராம் சென்டர், எண் 148 சீமெய் முகவரியில் தனது கிளையைத் திறந்து இருக்கிறது.

இளையருக்கும் பெரியோருக்கும் மூத்தோருக்கும் மனநல ஆதரவை வழங்குவது அதன் நோக்கம்.

சீமெய் ஸ்திரீட் 1ல் புளோக் 148ல் அமைந்து இருக்கும் அந்தக் கிளையில் முக்கியமாக இளையர் பராமரிப்புச் செயல்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

இளையர்கள் தங்கள் மனநலனில் கவனம் செலுத்தும் வகையில் அவர்களுக்கு ஊக்கமூட்டுவதற்காக பிராம் சென்டர் அமைப்பு மனநலப் பரிசோதனைகளை நடத்துகிறது.

பயிற்றுவிப்பது, தோழமைத் திட்டம், மனோவியல் கல்வி, பெற்றோர் ஆதரவு, ஆலோசனை, கலை சிகிச்சை ஆகியவற்றின் வழியாக அது மனரீதியிலான ஆதரவையும் வழங்குகிறது.

15 வயதும் அதற்கும் அதிக வயதுள்ள மாணவர்களும் பிராம் சென்டரின் உதவிக்கேட்டு பயனடையலாம்.

நிருபன் நவநீதன், 22, என்ற இளைஞர் இந்த ஆண்டு மே முதல் ஜூலை வரை சீமெயில் உள்ள பிராம் சென்டரில் மூத்தோரைச் சந்தித்து நேரடி அனுபவம் பெற சேர்ந்தார்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு சட்டம் படிக்கும் அந்த மாணவர், அதன் மூலம் தமக்குப் பயனுள்ள சில அனுபவங்கள் கிடைத்ததாகக் கூறினார்.

வெளியே அவ்வளவாகச் செல்லாமல் இருந்த தன்னுடைய பாணி மாறி அடிக்கடி வெளியே சென்று வரும் பழக்கம் உருவானதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த நிலையத்தில் அதன் நிர்வாகியான திருவாட்டி ஹென்னி ஹே உள்ளிட்ட பலரையும் தான் சந்தித்ததே இதற்கான காரணம் என்றார் அவர்.

இதனிடையே, சீமெய் கிளை அனைவருக்குமான அனைவரும் எட்டக்கூடிய மனநல நிலையமாக செயல்படும் என்று திருவாட்டி ஹே நம்பிக்கைத் தெரிவித்தார்.

ஜூரோங் ஈஸ்ட்டில் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் குடும்பத்தை மையமாகக் கொண்ட செயல்திட்டங்களுக்கான மற்றொரு நிலையம் திறக்கப்படும். அது மூத்தோர், பெரியவர்கள், இளையர்களை இலக்காகக் கொண்டு செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்