பிள்ளைகளுக்காக சட்டபூர்வ பொறுப்பு அமைப்பின்கீழ் சொத்தை வாங்குவதால் பெரிய அளவில் வரியைத் தவிர்த்துக் கொள்ளலாம் என்று யாராவது நினைத்தால் அவர்களுக்கு சொத்தே போய்விடக்கூடிய நிலை ஏற்படலாம்.
பெற்றோர் இருவருக்கு இந்தக் கதி ஏற்பட்டது. பிள்ளைகள் பெயரில் சொத்தை வாங்கி அதை பொறுப்பு அமைப்பின்கீழ் வைத்தால் அந்தச் சொத்திற்குக் கொள்முதல்காரர் வாங்க வேண்டிய கூடுதல் முத்திரை வரி தேவையில்லை.
அவர்கள் வாங்கும் இரண்டாவது மூன்றாவது சொத்துகளுக்கு அந்த வரி அவசியம். சிங்கப்பூரில் 2022 மே மாதம் ஒரு சட்ட மாற்றம் செய்யப்பட்டது. அந்தச் சட்டமாற்றம் இடம்பெற்றதற்கு முன் இதையே சிங்கப்பூரில் பல குடும்பங்களும் செய்துவந்தன.
இதைத்தான் அந்த இரு குடும்பங்களும் செய்தன. ஆனால் அந்தக் குடும்பங்கள் மணவிலக்கு பிரச்சினையை எதிர்நோக்கியதால் விவகாரம் வேறு மாதிரியாகிவிட்டது.
ஒரு பொறுப்பு அமைப்பின்கீழ் தங்கள் பிள்ளைக்குச் சொத்தை வாங்கி வைத்தால் அது அன்பளிப்பாக பிள்ளைக்குக் கிடைத்துவிடும் என்பதைச் சரிவரத் தெரிந்து கொள்ளாமல் அந்த இரண்டு குடும்பங்களும் செயல்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
சம்பந்தப்பட்ட குடும்பங்களைச் சேரந்த தந்தையர் இருவருமே பொறுப்பு அமைப்பின்கீழ் பிள்ளைகளுக்காக வாங்கப்பட்ட சொத்தை திருப்பிக் கேட்டனர். இதனால் பிரச்சினை ஏற்பட்டது.
கொள்முதல்காரர் கூடுதல் முத்திரை வரியைத் தவிர்த்துக்கொள்ளத்தான் தாங்கள் அவ்வாறு செய்ததாக அவர்கள் வாதிட்டனர். பிள்ளைக்குச் சொத்தை கொடுக்கும் எண்ணம் எதுவும் தங்களிடம் கிடையாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அவர்களின் புதல்வர்களும் முன்னாள் மனைவியரும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் பிள்ளைக்காகத்தான் பொறுப்பு அமைப்பு முறையாக ஏற்படுத்தப்பட்டது என்று தீர்ப்பு அளித்தது. ஆகையால் தந்தையர் இருவரும் தோற்றுவிட்டனர்.
அந்த இரண்டு வழக்குகளில் ஒன்றில் சொத்தைப் பிள்ளையிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்தப் பிள்ளை வயது வந்த பெரிய பிள்ளையாக வளர்ந்துவிட்டது. ஆகையால் நீதிமன்றம் அவ்வாறு உத்தரவிட்டது.
மற்றொரு வழக்கில் பொறுப்பு அமைப்பில் சொத்து நிர்வாகியாக இருந்துவந்த தந்தையை நீதிமன்றம் நீக்கிவிட்டது. அந்தத் தந்தை மகனுக்கு எதிராக செயல்பட்டதே காரணம்.
சென்ற ஆண்டில் சட்டம் மாற்றப்பட்டுவிட்டதால் இப்படி செயல்படுவோர் மேலும் பல பிரச்சினையை எதிர்நோக்க வேண்டி இருக்கும்.
பொறுப்பு அமைப்பின்கீழ் இப்போது சொத்து வாங்கினால் கொள்முதல் விலையில் 65% தொகை அளவிற்கு கொள்முதல்காரர் கூடுதல் முத்திரை வரியைச் செலுத்த வேண்டும்.
உண்மையிலேயே சொத்து யாருக்குப் போய்ச்சேர வேண்டுமோ அவருக்காக, அந்த நோக்கத்திற்காகத்தான் பொறுப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது என்பதை கொள்முதல்காரர்கள் மெய்ப்பித்தால் மட்டுமே அந்தத் தொகை திருப்பிக் கொடுக்கப்படும்.

