குறைந்த வருமான ஊழியருக்கான செயல் கூட்டணியின் திட்டங்கள் தொடரும்

குறைந்த வருமான ஊழியருக்கான செயல் கூட்டணியின் திட்டங்கள் தொடரும்

2 mins read
879197ff-6410-4d52-b0f9-5d2b3d8ae6cf
குறைந்த வருமான ஊழியர்கள் கண்ணியத்துடன் பார்க்கப்பட வேண்டும். இதற்கு ஏதுவாக சமூகத்திற்குள் அவர்களைப் பற்றிய எண்ணம் மாற வேண்டும் என்று மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது குறிப்பிட்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

குறைந்த சம்பள ஊழியருக்கான செயல்கூட்டணி என்ற அமைப்பு சனிக்கிழமை ஒன்பது செயல்திட்டங்களைக் காட்சிப்படுத்தியது.

‘அனுபவ நாள்’ என்பது அவற்றில் ஒன்று. குறைந்த சம்பள ஊழியருக்கு உதவுவதற்காக முந்தைய பயிலரங்குகளில் தாங்கள் உருவாக்கிய திட்ட யோசனைகளின் முன்னேற்றம் தொடர்பான புதிய தகவல்களைத் தொண்டூழியர்கள் அந்த நிகழ்ச்சியில் தெரியப்படுத்தினர்.

துப்புரவு ஊழியர் அல்லது பாதுகாவல் வேலை பார்க்கும் ஊழியரின் ஒரு நாள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இளையர்கள் புரிந்துகொள்ளும்படி செய்து அத்தகைய ஊழியர்களை அங்கீகரித்து, அவர்களை மதித்து நடக்கவேண்டும் என்ற எண்ணத்தை இளையரிடம் உருவாக்குவது ஒரு திட்டமாகும்.

ஒற்றையராக வாழும் தாய்மார்களுக்கு உதவி செய்து நீண்டகாலப்போக்கில் அவர்கள் வேலை பார்க்க ஆதரவு அளிப்பது மற்றொரு திட்டம்.

பாதுகாவல் ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்கள் மேம்படுவதற்கான வாய்ப்புகள் தந்து அதன்மூலம் வாழ்க்கைத்தொழிலில் அவர்கள் முன்னேற உதவக்கூடிய செயலி ஒன்றை உருவாக்குவது மற்றொரு திட்டம்.

தொண்டூழியர்களைத் திரட்டி தீர்வுகளை உருவாக்கி குறைந்த வருமான ஊழியர்களுக்கு உதவுவதற்காக குறைந்த சம்பள ஊழியருக்கான செயல்கூட்டணி 2021 மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. சனிக்கிழமை அந்தக் கூட்டணி அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது.

கடந்த இரண்டாண்டுகளில் அந்தக் கூட்டணி வெற்றிகரமான முறையில் 14 செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தி இருக்கிறது.

மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.

குறைந்த சம்பள ஊழியர்கள் கண்ணியத்துடன் பார்க்கப்பட வேண்டும். இதற்கு ஏதுவாக சமூகத்திற்குள் அவர்களைப் பற்றிய எண்ணம் மாற வேண்டும் என்று திரு ஸாக்கி குறிப்பிட்டார்.

செயல் கூட்டணி முடிவுக்கு வந்திருந்தாலும் அதனுடைய சில திட்டங்கள் மேலும் மேம்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
ஊழியர்