அமெரிக்காவின் வடமேற்கு மாநிலமான ஐடஹோவில் சிங்கப்பூர் ஆயுதப் படை ஆளில்லா கருவிகளைக் கொண்டு பயிற்சி நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ராணுவ வீரர்கள் நகர்ப்புறச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு முன்பு அவர்களுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தித் தர, சிங்கப்பூர் ராணுவம் அங்கு இயந்திர நாய்களைச் சோதித்து வருகிறது.
சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த கேப்டன் லோய் யோங் வெய், சிக்கலான நிலப்பகுதிக்கும் நகர்ப் பகுதிகளுக்கும் சாத்தியமுள்ள ஒரு தீர்வாக இயந்திர நாய்கள் விளங்குவதாகக் கூறினார்.
ஒளிவெளிச்சத்தைக் கண்டறிதது உணர்க்கருவிகள் மூலம் நிலபரப்பின் முப்பரிமாண வடிவங்களையும் வரைபடங்களையும் இந்த இயந்திர நாய்களால் வரைய முடியும். அத்தகைய சூழலில் என்ன எதிர்பார்ப்பது என்பது குறித்து ராணுவ வீரர்களுக்கு இது உதவியாக இருக்கும்.
அதே வேளையில், ராணுவ வீரர்களின் பாதுகாப்பையும் இந்த இயந்திர நாய்கள் உறுதிசெய்வதாக தற்காப்பு அறிவியல், தொழில்நுட்ப அமைப்பைச் சேர்ந்த திரு பிரையன் இங், 35, தெரிவித்தார்.
மிரட்டல்களைக் கண்டறியும் ராணுவத்தின் ஆற்றலுக்கு உதவ, நுண்ணிய ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன. கைக்கணினி வழியாக அத்தகைய பல வானூர்திகளை ராணுவ வீரர் ஒருவரால் இயக்க முடியும்.
திட்டமிடப்பட்ட பயணப் பாதைகள் மூலம், இந்த வானூர்திகளால் போர்க்களத்தை ஆராய முடியும். அவை எடுக்கும் படங்கள், கணினி மூலம் ஆராயப்படுகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை (சிங்கப்பூர் நேரப்படி சனிக்கிழமை) சிங்கப்பூர் செய்தியாளர்களுக்கு இந்தப் பயிற்சியின் செயல்முறை செய்து காண்பிக்கப்பட்டது.

