சிங்கப்பூர் பயணிகள் சென்ற வேன் பினாங்கு பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து; ஒருவர் மரணம்

2 mins read
2dd48440-0317-41ea-8694-fc8df5be49ab
புக்கிட் கெந்திங் மலை பொழுதுபோக்குப் பூங்கா, உணவகத்தில் பயணிகள் இரவு உணவு சாப்பிட்ட பிறகு அவர்கள் சென்ற வேன் மலையிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது. - மலேசிய சமூக ஊடகம்
multi-img1 of 2

மலேசியாவின் பினாங்கு மாநிலம், புக்கிட் கெந்திங்கில் வேன் ஒன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அதிலிருந்த மாது ஒருவர் உயிரிழந்தார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த பயணிகள் 10 பேர் அப்போது அந்த வேனில் சென்றுகொண்டிருந்தனர். அந்த வேனில் இருந்த ஓட்டுநர் உட்பட 11 பேரில் ஐவருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டதாகவும் எஞ்சிய ஐவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் பாலிக் புலாவ் தீயணைப்பு, மீட்பு நிலையப் பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார். அவர்கள் அனைவருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

கடுமையாக காயம் அடைந்தோரில் அந்த வேனை ஓட்டிய மலேசியர் ஒருவரும் அடங்குவார் என அப்பேச்சாளர் தெரிவித்தார்.

புக்கிட் கெந்திங் மலை பொழுதுபோக்குப் பூங்கா, உணவகத்தில் அப்பயணிகள் இரவு உணவு சாப்பிட்ட பிறகு அந்த வேன் மலையிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது.

பினாங்கின் தீயணைப்பு, மீட்புத் துறை கனமழைக்கு மத்தியில் மேற்கொண்ட மீட்புப் பணிகள், ஏறக்குறைய மூன்று மணி நேரம் நீடித்து இரவு 11.30 மணியளவில் நிறைவுற்றன.

பாலிக் புலாவ் தீயணைப்பு நிலையத்துக்கு இந்த விபத்து குறித்து இரவு 8.14 மணிக்குத் தகவல் கிடைத்தது.

கட்டுப்பாட்டை இழந்து சறுக்கிய அந்த வேன், 6 மீட்டர் ஆழமுடைய பள்ளத்தாக்கிற்குள் விழுந்ததாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர். விபத்து நிகழ்ந்த இடத்துக்கு மீட்புப் பணியாளர்கள் வந்தபோது, வேனிலிருந்து பயணிகள் ஐவர் தாங்களாகவே வெளியேறிவிட்டனர்.

விபத்தில் இறந்த மாதிற்கு திங்கட்கிழமை பிரேதப் பரிசோதனை நடத்தப்படவிருந்ததாக பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் தென்மேற்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் கமாருல் ரிஸால் ஜெனால் கூறினார்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்