சிங்கப்பூரில் ‘டௌன் சிண்ட்ரோம்’ எனப்படும் மனநலிவுக் குறைபாடு உள்ளோரிடையே ‘டிமென்ஷியா’ எனப்படும் முதுமைக்கால மறதிநோய் இளம் வயதிலேயே ஏற்படும் போக்கு அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
65க்குக் குறைவான வயதுடையோருக்கு முதுமைக்கால மறதிநோய் ஏற்பட்டால் அது இளம் வயதிலேயே பாதித்ததாகக் கருதப்படுகிறது.
மனநிலை மாற்றம், நடத்தையில் மாற்றம், நினைவாற்றல் இழப்பு உள்ளிட்டவை இந்நோயின் அறிகுறிகள்.
அனைத்துலக மதிப்பீட்டின்படி, பிறக்கும் குழந்தைகளில் 700 முதல் 800 குழந்தைகளில் ஒன்று ‘டௌன் சிண்ட்ரோம்’ எனப்படும் மனநலிவுக் குறைபாட்டுடன் பிறக்கிறது.
இத்தகைய குழந்தைகள் வளர்ந்து 60 வயதாகும்போது இவர்களில் 50 முதல் 80 விழுக்காட்டினருக்கு முதுமைக்கால மறதிநோயும் ஏற்படுவதாக அண்மைய ஆய்வுகள் கூறுகின்றன. மனநலிவுக் குறைபாடு இல்லாதோரிடையே இந்த விகிதம் 10 விழுக்காடாக உள்ளது.
ஆனால் தற்போது மனநலிவுக் குறைபாடு உள்ளோர் 40, 50 வயதிலேயே மறதிநோயால் பாதிக்கப்படும் போக்கு கவலையளிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மனநலிவுக் குறைபாடு உள்ளோரின் ஆயுட்காலம் அதிகரித்திருப்பதால் அவர்களில் மறதிநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
ஏற்கெனவே மனநலிவுக் குறைபாடு உள்ளோருக்கு மறதிநோயைச் சமாளிக்கப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளையும் பயிற்சிகளையும் எடுத்துக்கொள்வதில் சிக்கல் ஏற்படும். அவர்களின் பராமரிப்பாளர்களும் சிரமப்படுவர். பெரும்பாலும் வயதான பெற்றோரே மனநலிவுற்றோரைப் பராமரிக்கின்றனர் என்பதை மருத்துவர்கள் சுட்டினர்.
தொடர்புடைய செய்திகள்
இத்தகையோருக்குக் கைகொடுக்கும் திட்டத்தை உருவாக்க முனைந்துள்ளார் ‘ஐடிஹெல்த்’ மருந்தகத்தை நடத்தும் மருத்துவர் சென் ஷிலிங். மதிநுட்பக் குறைபாடு உடையோருக்கும் அவர்களின் குடும்பத்தாருக்குமான மருந்தகம் இது.
மனநலிவுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டோருக்கும் ஏற்றவாறு மருந்தகச் சேவை வழங்கும் திட்டத்தைத் தொடங்க முயற்சி மேற்கொள்கிறார் மருத்துவர் சென்.
மருந்தகத்தின் சமூக சேவையாளர் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்துக்கு வழக்கமான இடைவெளியில் நேரில் சென்று ஆலோசனை வழங்குவார்.
நோயாளிகளின் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் அதேவேளையில் பராமரிப்பாளர்களுக்கும் குடும்பத்தினருக்கும் உணர்வுரீதியான ஆதரவை வழங்க இந்த சமூக சேவையாளர்கள் உதவுகின்றனர்.
‘டிமென்ஷியா சிங்கப்பூர்’ அமைப்பும் இந்த முயற்சியில் கைகோத்துள்ளது. வெளிநாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகளை ஆய்வுசெய்து சிங்கப்பூரில் அவற்றை நடைமுறைப்படுத்த அது உதவுகிறது.