மத்திய சிங்கப்பூர் குடியிருப்பாளர்களுக்கு உதவித் திட்டங்கள் அறிமுகம்

மத்திய சிங்கப்பூர் குடியிருப்பாளர்களுக்கு உதவித் திட்டங்கள் அறிமுகம்

2 mins read
c2453a88-9eff-40ec-8755-0a176481059c
11வது மத்திய சிங்கப்பூர் சமூக மேம்பாட்டு மன்ற நியமனச் சடங்கில் மத்திய சிங்கப்பூர் மாவட்ட மேயர் டெனிஸ் புவாவுடன் பிரதமர் லீ சியங் லூங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அங் மோ கியோ, ஜாலான் புசார், தஞ்சோங் பகார் போன்ற பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு சில உதவித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றன.

பள்ளிப் பேருந்துக் கட்டணக் கழிவு, அக்கம்பக்க வேலைத் திட்டம், சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளைக் கொண்டுள்ள குடும்பங்களுக்கான தோழமைக் கட்டமைப்பு உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.

மத்திய சிங்கப்பூர் சமூக மேம்பாட்டு மன்றம், இதர நன்கொடையாளர்களின் பங்களிப்பின் மூலம் ஏற்படுத்தப்பட்ட $10 மில்லியன் நிதி இத்தகைய திட்டங்களுக்கு ஆதரவளிக்கும்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள அத்திட்டங்கள் சமூக மேம்பாட்டு மன்றத்தின் ஐந்து தூண்களை உள்ளடக்கும்.

சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளை அனுசரிக்கும் 100 சமூகத் திட்டங்கள் வரை நடைமுறைப்படுத்த மன்றம் திட்டமிடுவதாக மத்திய சிங்கப்பூர் மாவட்ட மேயர் டெனிஸ் புவா திங்கட்கிழமை தெரிவித்தார்.

ஜாலான் புசார் சமூக நிலையத்தில் நடைபெற்ற 11வது மத்திய சிங்கப்பூர் சமூக மேம்பாட்டு மன்ற நியமனச் சடங்கில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் லீ சியன் லூங், வட்டார அலுவலகங்களைப் போன்ற சமூக மேம்பாட்டு மன்றங்கள் மாவட்ட அளவில் முக்கியப் பங்காற்றுவதாகக் குறிப்பிட்டார்.

குடியிருப்பாளர்களின் தேவைகளைத் தொகுப்பதற்கும் வலுவான தொண்டூழிய, நன்கொடையாளர் கட்டமைப்புகளைக் கொண்டிருக்க வளங்களையும் ஆற்றல்களையும் கட்டியெழுப்புவதற்கும் அடித்தளப் பிரிவுகள் மற்றும் சமூகச் சேவை அமைப்புகளுடன் சேர்ந்து சமூக மேம்பாட்டு மன்றங்கள் அணுக்கமாகப் பணியாற்றுவதாக பிரதமர் லீ கூறினார்.

தேவைகளையும் வளங்களையும் ஒன்றோடு ஒன்று இணைக்கும் சமூக மேம்பாட்டு மன்றங்கள், குடியிருப்பாளர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையேயான பாலமாகவும் விளங்குவதாக பிரதமர் லீ சொன்னார்.

முதற்கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட உள்ள திட்டங்களில், அக்கம்பக்கத்தில் இருக்கும் வேலைகளுடன் குடியிருப்பாளர்களை இணைக்கும் உள்ளூர் வேலைத் திட்டமும் ஒன்று.

திங்கட்கிழமை நடந்த நிகழ்ச்சியில் மத்திய சிங்கப்பூர் சமூக மேம்பாட்டு மன்றத்திற்குப் புதிய மன்றம் ஒன்று நியமிக்கப்பட்டது. பொது, தனியார் துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மூன்று ஆண்டு தவணைக் காலத்துக்கு சேவையாற்றுவர்.

குறிப்புச் சொற்கள்