தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இணையத் தீங்குகளில் இருந்து பாதுகாக்க மேலும் சட்டங்கள் தேவை: சண்முகம்

3 mins read
3b3243ed-6974-4a13-8e74-bfc236044ea6
இணையத் தீங்குகள் தொடர்பான மூன்று நாள் கருத்தரங்கின் தொடக்க நாளில் சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் உரையாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இணையத்தில் தீங்கு விளைவிக்கக்கூடிய அம்சங்களில் பொதுமக்கள் சிக்கிவிடாமல் தடுத்து நடவடிக்கை எடுக்கவும் தங்களைத் தாங்களே அவர்கள் பாதுகாத்துக்கொள்ளவும் சட்டத்தை விரிவாக்க வேண்டிய அவசியம் எழுந்து உள்ளதாக உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் தெரிவித்து உள்ளார்.

அவர் தமது உரையில் குறிப்பிடுகையில், “நேரடியாகவும் இணையத்திலும் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் நோக்கம் கொண்ட ‘போஹா’ என்னும் சட்டம் சிங்கப்பூரில் அமலில் உள்ளது.

“இணையம் என்பது எப்போதும் மாறிக்கொண்ட இருக்கும் தன்மை கொண்டது. செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் போலித்தகவல்கள் தற்போது அதிகரித்து வருவதை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

“இப்படிப்பட்ட சூழலில், உருவாகும் இணையத் தீங்குகள் நடப்பில் இருக்கும் சட்டத்திற்கு உட்படாதவையாக இருக்கக்கூடும்,” என்றார் திரு சண்முகம்.

இணையத் தீங்குகள் தொடர்பான மூன்று நாள் கருத்தரங்கின் தொடக்க நாளில் அவர் உரை நிகழ்த்தினார். சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் இதர தொழில்துறை நிபுணர்கள் கலந்துகொண்டனர்.

இணையத் தீங்குகள், கடினமான போலித் தகவல்கள், கலாசாரத்தைத் சீர்குலைப்பவை போன்றவற்றைத் தடுப்பது தொடர்பாக அவர்கள் ஒன்றுகூடி விவாதித்தனர்.

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் டேமியன் கோலின்ஸ், ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜூலி இன்மன் கிராண்ட் போன்றவர்களும் இந்தக் கருத்தரங்கில் உரையாற்ற உள்ளனர்.

தீங்கு ஏற்படுத்தும் செயற்கை நுண்ணறிவின் அதிகரிப்பு, இணையப் பாதுகாப்பின் மீது கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை மேலும் வலுப்படுத்தி உள்ளதாக திரு சண்முகம் கூறினார்.

அதற்கு, ஞாயிற்றுக்கிழமை பிபிசி செய்தி தெரிவித்த தீங்கு ஒன்றை அவர் உதாரணமாகச் சுட்டினார்.

அல்மெண்ட்ராலெகோ என்னும் ஸ்பானிய நகரத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் நிர்வாண கோலத்தில் இருப்பதுபோன்று செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய போலி படங்கள் அந்தப் பெண்களுக்கே தெரியாமல் சமூக ஊடகங்களில் பரவியது பற்றியது அந்த பிபிசி செய்தி என்றார் திரு சண்முகம்.

முழுமையாக ஆடை அணிந்த நிலையில் அந்தப் பெண்கள் இருக்கும் புகைப்படங்களை கைப்பேசி செயலி ஒன்றின் மூலம் ஆடையற்ற பெண்களாகக் காட்டும் படங்கள் உருவாக்கப்பட்டன.

11 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட 20க்கும் மேற்பட்ட பெண்கள் இந்தச் சூழ்ச்சிக்குப் பலியாகி உள்ளதாக பிபிசி செய்தி தெரிவித்து இருந்தது.

சராசரி சிங்கப்பூரர்கள் அனுபவித்த இணையத் தீங்குகள் குறித்து அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வு கண்டுபிடிப்புகள் குறித்தும் திரு சண்முகம் பேசினார்.

SHE எனப்படும் லாப நோக்கமற்ற அமைப்பு நடத்திய ஆய்வின் முடிவுகள் இம்மாதம் வெளியிடப்பட்டன. கிட்டத்தட்ட ஐந்தில் மூவர் இணையத் தீங்குகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்றது ஆய்வறிக்கை. இளையர்களிடையே குறிப்பாக பெண்களிடையே இது தென்பட்டது.

அமைச்சர் சண்முகம் கூறுகையில், “புகைப்படம் அடிப்படையிலான துன்புறுத்தல் சம்பவங்கள், அதாவது ஒருவரின் சம்மதம் இன்றி அவரது தனிப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றும் சம்பவங்கள் குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம். ஆனால் அதற்கான விசாரணை நடந்து முடிய சில காலம் பிடிக்கும்.

“வேறு சில தெரிவுகளும் உள்ளன. பணத்தையும் நேரத்தையும் செலவழித்து வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்றத்தை நாடலாம். ஆனால், அதற்குள் போலிப் புகைப்படங்கள் வேகமாகப் பரவி, பாதிக்கப்பட்டோரின் மனதையும் கௌரவத்தையும் உறவுகளையும் சிதைக்கும் நிலை உள்ளது.

“தீங்கு விளைவித்தவர் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்ட பின்பும் அந்தப் படங்கள் பரவிக்கொண்டுதான் இருக்கும்.

“தொழில்நுட்பம் வளரும் அதேவேளை சவால்களும் அதிகரித்து வருகின்றன. சட்டத்திற்கும் அப்பால் இணைய ஆபத்தில் சிக்கும் தனிப்பட்டவர்கள் தங்களைத் தாங்களே எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளலாம் என்பது குறித்து கருத்தரங்கு விவாதிக்கும் என்று நான் கருதுகிறேன்,” என்று திரு சண்முகம் தமது உரையில் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்