சமூக அறிவியல் பல்கலைக்கழக வேந்தராக திருவாட்டி ஹலிமா நியமனம்

சமூக அறிவியல் பல்கலைக்கழக வேந்தராக திருவாட்டி ஹலிமா நியமனம்

1 mins read
4d1d2428-6b99-4ae7-8fbf-c7965e935cb6
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பொறுப்பை திருவாட்டி ஹலிமா யாக்கோப் அக்டோபர் 1ஆம் தேதி ஏற்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோப் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதனை அந்தப் பல்கலைக்கழகம் திங்கட்கிழமை அறிவித்தது. திருவாட்டி ஹலிமா அந்தப் பொறுப்பை அக்டோபர் 1 முதல் வகிப்பார் என்றும் அது தெரிவித்தது.

திரு ஸ்டீஃபன் லீ சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் வேந்தராக 2018ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். இதற்கு முன்னர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் தலைவராகவும் அதிபர் ஆலோசனை மன்ற உறுப்பினராகவும் இருந்தவர் திரு லீ.

இதற்கிடையே, நியமனம் குறித்து கருத்துத் தெரிவித்து உள்ள திருவாட்டி ஹலிமா, “சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக நியமிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டு உள்ளேன்,” என்றார்.

“வாழ்நாள் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் செயல்படும் இந்தப் பல்கலைக்கழகம் சிங்கப்பூரின் தனித்துவ இடத்தைப் பிடித்துள்ளது.

“அதன் தொடர் வெற்றிப் பயணத்தை உறுதி செய்யும் நோக்குடன் எல்லா அமைப்பினருடனும் இணைந்து பணியாற்ற உள்ளேன்,” என்றும் திருவாட்டி ஹலிமா தெரிவித்து உள்ளார்.

சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் தலைவர் டான் டாய் யோங் கூறுகையில், “முக்கியமான சமூகப் பிரச்சினைகளுக்கு நீண்டநாள்களாகக் குரல் கொடுத்து வரும் திருவாட்டி ஹலிமாவை வேந்தராக வரவேற்பதில் பெருமைகொள்கிறோம்,” என்று தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்