சிங்கப்பூரில் இந்த ஆண்டின் (2023) முற்பாதியில் வழிபாட்டுத் தலங்களில் நடந்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் 11 புகார்கள் பெறப்பட்டதாகக் காவல்துறை, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியுள்ளது.
ஒப்புநோக்க, 2022ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் அளிக்கப்பட்ட புகார்களைவிட அந்த எண்ணிக்கை இருமடங்குக்குமேல் என்று கூறப்பட்டது.
உண்டியலில் இருந்து பணம் திருடப்பட்டது முதல் வழிபாட்டுத் தலங்களுக்கு உள்ளாகவே சிலர் மற்றவர்களின் உடைமைகளைத் திருடியது வரை பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் இவ்வாறு புகாரளிக்கப்பட்டது.
இத்தகைய திருட்டுச் சம்பவங்கள், கத்தோலிக்க தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தாவோயிச கோயில்கள் ஆகியவற்றில் தொடர்ந்து நடந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து, உண்டியல்களுக்கு எளிதில் திறக்க இயலாத பூட்டுகளைப் பயன்படுத்துவது முதற்கொண்டு, பாதுகாவல் ஊழியர்களைப் பணியமர்த்துவது வரையிலான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இங்குள்ள வழிபாட்டுத் தலங்கள் மேற்கொண்டுவருகின்றன.
மெத்தடிஸ்ட் தேவாலயம் சிங்கப்பூரில் உள்ள அதன் 46 கிளைகளிலும் பாதுகாவல் ஊழியர்களை சம்பளத்துக்குப் பணியமர்த்தி உள்ளது.
தேவாலயத்தின் இதர ஊழியர்களுக்கு, உத்தேசத் திருட்டுச் சம்பவங்களைத் தடுப்பது குறித்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வழிபாட்டுச் சேவை முடிவடைந்த பிறகும் நன்கொடைப் பெட்டிகள் உடனடியாக அப்புறப்படுத்தப்படுகின்றன. திருட்டுக்கான வாய்ப்புகளைக் குறைப்பது நோக்கம்.
வார இறுதி வழிபாட்டுச் சேவைகளின்போது சந்தேகத்துக்குரிய வகையில் நடந்துகொள்பவர்களைக் கண்காணிக்கும்படி தொண்டூழியர்களை ஊக்குவித்திருப்பதாக மெத்தடிஸ்ட் தேவாலயத்தின் தொடர்பு மன்றத் தலைவர் டாக்டர் ஆண்டனி கோ கூறினார்.
மேலும், நன்கொடைகளை ரொக்கம் தவிர்த்து மாற்றுமுறையில் செலுத்தும்படி தேவாலயத்திற்கு வரும் பக்தர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
“கொவிட்-19 கிருமிப் பரவல் காலகட்டம் முதலே பக்தர்களை மின்னிலக்க முறையில் நன்கொடை செலுத்தும்படி ஊக்குவித்து வருகிறோம். சிறிய அளவிலான திருட்டுச் சம்பவங்களைக் குறைக்க இது உதவுகிறது,” என்று டாக்டர் ஆண்டனி கோ கூறினார்.
ரேஸ் கோர்ஸ் ரோட்டில் அமைந்திருக்கும் லியோங் சான் பௌத்த கோயிலில், உச்சநேரம் அல்லாத வேளையில் கூடுதலான தொண்டூழியர்களை வளாகச் சுற்றுக்காவல் பணியில் ஈடுபடுத்தியிருப்பதாக அக்கோயில் நிர்வாகம் கூறியது.
சில கண்காணிப்பு கேமராக்கள் உண்டியலைப் பார்த்தவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
திருடர்களிடமிருந்து பாதுகாக்கும் நோக்கில் உண்டியல்கள் திருகாணி மூலம் தரையில் பதிக்கப்பட்டுள்ளன. எளிதில் திறக்க இயலாத பூட்டுகள் பயன்படுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது.
பள்ளிவாசல்களில் நன்கொடைப் பெட்டிகள் இலக்கமிடப்பட்டுள்ளன. குறிப்பு வில்லைகள் பொருத்தப்பட்டு அவை முறையாகப் பாதுகாக்கப்படுவதாக ‘முயிஸ்’ எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றம் தெரிவித்துள்ளது.
முறையான இடைவெளியில் அந்த நன்கொடைப் பெட்டிகளில் இருக்கும் ரொக்கம் எண்ணப்பட்டு, பள்ளிவாசலின் கணக்குப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு, பின்னர் அதன் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதாக மன்றம் கூறியது.
நான்கு இந்துக் கோயில்களை நிர்வகிக்கும் இந்து அறக்கட்டளை வாரியம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அறிந்துகொள்ள, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், வாரியத்தை நாடியது. வாரிய நிர்வாகத்தின்கீழ் வராத மூன்று இந்துக் கோயில்களையும் அது நாடியுள்ளது. ஆனால் இன்னும் உரிய பதில் கிடைக்கவில்லை.
செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் ‘சர்ச் ஆஃப் த நேட்டிவிட்டி ஆஃப் த பிளஸ்ட் விர்ஜின் மேரி’ தேவாலயத்திலும் சாங்கி ரோட்டில் உள்ள ஹூன் சியன் கெங் கோயிலிலும் திருட்டுச் சம்பவங்கள் நடந்தன.