தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அப்பர் புக்கிட் தீமாவில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டில் 47 கிலோ வெடிபொருள்கள் இருக்கலாம்

2 mins read
61ba3df8-a10b-4a4e-a394-2016128d977b
இரண்டாம் உலகப் போர்க்கால வெடிகுண்டை அப்புறப்படுத்தும் பணிக்கு செவ்வாய்க்கிழமை சிங்கப்பூர் ஆயுதப் படை நிபுணர்கள் தயாராகின்றனர். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 6

அப்பர் புக்கிட் தீமாவில் கண்டறியப்பட்ட இரண்டாம் உலகப் போர்க்கால வெடிகுண்டு, 1942 பிப்ரவரியில் புக்கிட் தீமாவைக் கைப்பற்றும் முயற்சியின்போது வீசப்பட்டிருக்கக்கூடும்.

அப்பர் புக்கிட் தீமா சாலையில் உள்ள கூட்டுரிமை வீட்டுக் கட்டுமானத் தளத்தில் கடந்த புதன்கிழமை கண்டெடுக்கப்பட்ட அந்த வெடிகுண்டில் சுமார் 47 கிலோகிராம் எடை கொண்ட வெடிபொருள்கள் இருக்கலாம் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் வரலாற்றாசிரியர்கள் திங்கட்கிழமை கூறினர். அந்த வெடிபொருள்கள், ஒரு புளோக் வீடுகளை அழிப்பதற்குப் போதுமானவை.

100 கிலோகிராம் எடை கொண்ட அந்த வெடிகுண்டு, ஜப்பானிய ராணுவத்தின் தாக்குதல்களுக்குக் கைகொடுத்த போர் விமானம் ஒன்று வீசிய வெடிபொருளாக இருக்கலாம் என்று அவர்கள் கூறினர்.

மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் விமானம் ஒன்றிலிருந்து வீசப்படும் அத்தகைய வெடிகுண்டுகள் நிலத்திற்கு அடியில் பல மீட்டர் ஆழத்திற்கு எளிதில் ஊடுருவக்கூடும் என்று ஆஸ்திரேலிய உத்திபூர்வ கொள்கைக் கழகத்தைச் சேர்ந்த மூத்த பகுப்பாய்வாளரான டாக்டர் யுவன் கிரகாம் கருத்துரைத்தார்.

வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் கருவி, பல்வேறு காரணங்களால் அதை வெடிக்கச் செய்யாமல் போகலாம் என்று போர்க்கால வரலாற்றாசிரியர் ஜான் குவோக் கூறினார்.

“போர் முடிவுக்கு வந்த பின் இடம்பெற்ற துப்புரவுப் பணிகளின்போது இத்தகைய வெடிகுண்டுகள் கண்டறியப்படாமல் போயிருக்கலாம். கட்டுமானப் பணிகளின்போது அவை கண்டெடுக்கப்படுகின்றன,” என்றார் அவர்.

தரக்குறைவு காரணமாக அந்த 100 கிலோ வெடிகுண்டு காலப்போக்கில் மேலும் ஆபத்தானதாவதற்கு சாத்தியம் இருப்பதாக ‘டிஃபென்ஸ் நியூஸ்’ எனும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தற்காப்பு சஞ்சிகையின் நிருபரான திரு மைக் இயோ கருத்துரைத்தார்.

சிங்கப்பூரில் வீசப்பட்ட ஆகப்பெரிய வெடிகுண்டு இதுவன்று. மலாயாவில் இடம்பெற்ற ஜப்பானிய ஆக்கிரமிப்பின்போது 250 கிலோகிராம் வரை எடையுள்ள பெரிய வெடிகுண்டுகள் வீசப்பட்டன.

குறிப்புச் சொற்கள்
வெடிகுண்டுபோர்கட்டுமானம்