அப்பர் புக்கிட் தீமாவில் இரண்டாம் உலகப் போர்க்கால வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் நடவடிக்கை

4,000 குடியிருப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கை சுமுகமாக நடந்தேறியது

2 mins read
30ca3c9c-92fe-4b8c-ab78-152093b82f46
வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் நடவடிக்கைக்கு முன்னர், காலை 7.40 மணிக்கு தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறும் குடியிருப்பாளர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

அப்பர் புக்கிட் தீமாவில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாம் உலகப் போர்க்கால வெடிகுண்டைக் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெடிக்கச் செய்யும் நடவடிக்கையை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு முன்பு ஏறக்குறைய 4,000 குடியிருப்பாளர்கள் தங்களது வீடுகளைவிட்டு வெளியேறினர்.

சிங்கப்பூரில் கண்டெடுக்கப்பட்ட ஆகப்பெரிய போர்க்கால வெடிகுண்டுகளில் ஒன்றாக நம்பப்படும் 100 கிலோகிராம் எடையுடைய அந்த வெடிகுண்டு, சிங்கப்பூர் ஆயுதப் படையின் வெடிகுண்டு அகற்றும் பிரிவால் செவ்வாய்க்கிழமை வெடிக்கச் செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.

செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை தங்களது வீடுகளைவிட்டு வெளியே இருக்குமாறு குடியிருப்பாளர்களிடம் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரியப்படுத்தினர்.

அவர்கள் இருப்பதற்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளில் செஞ்சா-கேஷு சமூக மன்றமும் ஒன்று.

செவ்வாய்க்கிழமை காலை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு அங்கு சென்று நிலவரத்தைப் பார்வையிட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த சுமார் 100 குடியிருப்பாளர்களில் பெரும்பாலானோர் முதியவர்களாக இருந்தனர்.

ஒரே நேரத்தில் 1,500 பேர் வரை இருப்பதற்கான இடவசதி செஞ்சா-கேஷு சமூக மன்றத்திடம் இருப்பதாக மக்கள் கழக அடித்தளத் தலைவர் லிண்டா இங் தெரிவித்தார்.

வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், செவ்வாய்க்கிழமை காலை செஞ்சா-கேஷு சமூக மன்றத்துக்குச் சென்று அங்கு குடியிருப்பாளர்கள் சிலரிடம் பேசினார்.

வெடிகுண்டைக் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெடிக்கச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறை, சிங்கப்பூர் ஆயுதப் படை, கட்டட கட்டுமான ஆணையம், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு தாம் நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புவதாக செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் விவியன், குடியிருப்பாளர்களையும் வீடுகளைவிட்டு வெளியேற்றும் நடவடிக்கை சுமுகமாக நடந்தேறியதாகக் கருத்துரைத்தார். குடியிருப்பாளர்கள் குறித்த நேரத்தில் வீடுகளைவிட்டு வெளியேறியதாகவும் காவல்துறைக்கு அவர்கள் ஒத்துழைப்பு நல்கியதாகவும் டாக்டர் விவியன் குறிப்பிட்டார்.

போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது குறித்து தமக்குக் கவலை ஏற்பட்டதாகச் சொன்ன அவர், ஆனால் காவல்துறை நிலவரத்தைத் திறம்படக் கையாண்டதாகக் கூறினார்.

எளிதில் பாதிக்கப்படுவோர் மீது அதிகாரிகள் கவனம் செலுத்தியதாகவும் படுத்த படுக்கையாக இருப்பவர்கள் பகல்நேர பராமரிப்பு வசதிகளைப் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாகவும் டாக்டர் விவியன் தெரிவித்தார்.

சமூகத்தினர் ஒருவர் மற்றொருவருக்கு ஆதரவளித்ததையும் மக்கள் நிதானத்துடன் இருந்ததையும் எண்ணி தாம் மகிழ்ச்சி கொள்வதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்