கூட்டுரிமை மறுவிற்பனை வீட்டு விலைகள் திடீர் உயர்வு

கூட்டுரிமை மறுவிற்பனை வீட்டு விலைகள் திடீர் உயர்வு

2 mins read
3bf475be-bcd7-4bcc-a96d-810ff2f74182
ஆண்டு அடிப்படையில் பார்த்தால் கூட்டுரிமை மறுவிற்பனை வீடுகளின் விலை 7.6 விழுக்காடு அதிகரித்துள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கூட்டுரிமை மறுவிற்பனை வீடுகளின் விலைகள் எதிர்பாராத வகையில் சற்று மீண்டு வந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக அவற்றின் விலைகள் சரிவை நோக்கி சென்று கொண்டிருந்தன.

கூட்டுரிமை வீடுகளின் விற்பனை அதிகரித்ததால் ஏறுமுகத்தை நோக்கி விலை நகர்ந்துள்ளது.

சென்ற ஆகஸ்ட் மாதத்தில் மறுவிற்பனை விலை மீட்சியடைந்து ஒரு விழுக்காடு அதிகரித்தது. கடந்த ஜூலை மாதம் 0.2 விழுக்காடு சரிவிலிருந்து அது மீண்டு வந்துள்ளது.

சொத்துச் சந்தை இணையத்தளங்களான 99.co, எஸ்ஆர்எக்ஸ் ஆகியவை வெளியிட்ட புள்ளி விவரங்களிலிருந்து கூட்டுரிமை மறுவிற்பனை வீடுகளின் நிலவரம் தெரிய வந்துள்ளது.

வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டிலிருந்து கூட்டுரிமை வீடுகளுக்கு மேம்படுத்த உரிமையாளர்கள் விரும்புகின்றனர். மறுவிற்பனை விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணம் என்று சொத்துச் சந்தை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஆகஸ்ட் மாதத்தில் புதிய கூட்டுரிமை வீடுகள் எதுவும் விற்பனைக்கு வரவில்லை. இதனால் மறுவிற்பனை வீடுகளின் தேவை கூடியது என்று ஹட்டன்ஸ் ஏசியா தலைமை நிர்வாகி மார்க் யிப் கூறியுள்ளார்.

ஆண்டு அடிப்படையில் பார்த்தால் கூட்டுரிமை வீடுகளின் மறுவிற்பனை விலை 7.6 விழுக்காடு கூடியது. புறநகர்ப் பகுதிகளில் 9.8 விழுக்காடு அளவுக்கு விலை அதிகரித்தது.

ஆரஞ்சுடீ அண்ட் டை நிறுவனத்தின் ஆய்வு, பகுப்பாய்வு பிரிவின் உதவி தலைவரான கிறிஸ்டின் சுன், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் புறநகர்ப்பகுதியில் மறுவிற்பனை விலை 1,6 விழுக்காடு கூடியது என்றார்.

புறநகர்ப் பகுதிகளில் அதிக கூட்டுரிமை வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு குடியேறுவதற்குத் தயாராக இருந்ததால் எல்லா வட்டாரங்களிலும் விலை உயர்வு காணப்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மத்திய வட்டாரத்துக்கு வெளியே உள்ள கூட்டுரிமை வீடுகள் மற்ற வட்டாரங்களுடன் ஒப்பிடும்போது கட்டுப்படியாகக்கூடிய விலையில் இருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

கூட்டுரிமை வீடுகளின் விற்பனை மூன்று விழுக்காடு கூடியது. அதாவது ஆகஸ்ட் மாதத்தில் ஏறக்குறைய 880 வீடுகள் கைமாறின. இந்த எண்ணிக்கை ஜூலையில் 854 வீடுகளாக இருந்தன.

குறிப்புச் சொற்கள்